<$BlogRSDURL$>

Wednesday, December 28, 2005

வாசகிகள் கைமணம்! - 1 


திருவாதிரை களி

தேவையானவை: அரிசி & 1 கப், வெல்லம் &amp;amp; 2 கப், தேங்காய் துருவல் & 1 மூடி, முந்திரிப்பருப்பு & 15, நெய், ஏலப்பொடி & 5 டேபிள்ஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை பொன்னிறமாக வறுத்து கரகரப்பாக பொடி செய்யவும். கொஞ்சம் தண்ணீரில் வெல்லம் போட்டு கரைத்து வடிகட்டி, வேண்டிய அளவு (அதாவது 1 பங்கு அரிசிக்கு & 4 பங்கு) தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். அது கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய் துருவல், 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, உடைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும். அதோடு, வேகவைத்த துவரம்பருப்பை சேர்க்கவும். இக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து 8 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து எடுக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
அரிசியை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். அப்போதுதான் வேகும். வெல்லம் உப்பு வெல்லமாக இல்லாமல், பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.

களி குழம்பு

தேவையானவை: அவரைக்காய் & 8, உரித்த மொச்சை கொட்டை & 1 கரண்டி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு & 1, சேப்பங்கிழங்கு & 4, வாழைக்காய் & 1, பூசணி & 1 துண்டு, பரங்கிக்காய் & 1 துண்டு, புளி & 1 பெரிய எலுமிச்சை அளவு, உப்பு & தேவைக்கு, அரிசி மாவு & கொஞ்சம்.
குழம்பு பொடிக்கு: துவரம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், தனியா & 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 4 (அ) 5, வெந்தயம் & 1 டீஸ்பூன், கடுகு & 1 டீஸ்பூன், கறிவேப்பிலை & 2 ஆர்க்கு.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், பெருங்காயம் & 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் & 1, கறிவேப்பிலை & 1 ஆர்க்கு, நல்லெண்ணெய் & 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அவரைக் காயை இரண்டாக கிள்ளி வைக்கவும். சேப்பங்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து வைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் ஆகிய எல்லாவற்றையும் தோல் சீவி, ஒரே அளவு துண்டுகளாக நறுக்கவும். குழம்பு பொடிக்கான சாமான்களை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து, கரகரப்பாக பொடி செய்யவும்.
பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு காய்கறி, மொச்சை போட்டு வேகவைக்கவும். பிறகு புளியை கெட்டியாக கரைத்துவிட்டு உப்பு, மஞ்சள்பொடி, வெந்த சேப்பங்கிழங்கு போட்டு, நன்றாக கொதித்ததும் குழம்புபொடியை தூவவும். அதில் கொஞ்சம் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து விட்டு, கொதித்த பின், எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி திருவாதிரை கனியுடன் பரிமாறவும்.

இந்தக் குழம்பில் ஒற்றைப்படையில் தான் காய்களைப் போடவேண்டும் என்பது ஐதீகம். கேரட், பட்டர்பீன்ஸ், சோயா பயறு போன்ற காய்களையும் சேர்க்கலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதோடு, உடலுக்கும் சத்து.


புழுங்கலரிசி கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி & 3 கப், தேங்காய் துருவல் & 2 மூடி, உப்பு & தேவைக்கேற்ப.

செய்முறை: புழுங்கலரிசியை களைந்து ஊறவைத்து தேங்காயும், உப்பும் சேர்த்து நறநறவென அரைக்கவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, அரைத்த விழுதைக் கொட்டி நன்றாக சுருள கிளறவும். சுருண்டு வரும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு கொதிக்கும் சமயம் மாவை கொழுக்கட்டையாக உருட்டி ஒவ்வொன்றாக மெதுவாக போடவும். ஒன்று மேலே வரும்போது மற்றதை போடவும். இப்படியே எல்லாவற்றையும் வேக வைக்கவும். கொஞ்சம் நீரில் கரையும் (இந்த தண்ணீர் தேங்காய் வாசனையுடன் குடிக்க நன்றாக இருக்கும். பிரியப்பட்டால் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். அல்லது மோர், உப்பு, பெருங்காயம் போட்டும் குடிக்கலாம்).
கொழுக்கட்டையை அப்படியே சட்னியுடன் சாப்பிடலாம். அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி, வாணலி யில் சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்தும் சாப்பிடலாம். வெகு ருசியாக இருக்கும். புழுங்கலரிசியை விரும்பாதவர்கள், இந்த கொழுக்கட்டையை பச்சரிசியிலும் செய்யலாம். அதிலும் ருசி நன்றாக இருக்கும்.

நன்றி: அவள் விகடன்

This page is powered by Blogger. Isn't yours?