<$BlogRSDURL$>

Sunday, March 26, 2006

பாஸ்தா காய்கறி 


தேவையானவை :

ஓலிவ் எண்ணை – 3 மேசைக் சிறுகரண்டிகள்

காய்கறிகள்:

1. ஸ்பினாச் கீரை – ஒரு கைப்பிடி அளவு – கழுவி பிரிக்கப்பட்டது
2. கேரட் – ஒன்று – நீள்வாக்கில் வெட்டி பாதியாக வெட்டப்பட்டவை
3. காளான்கள் – வெட்டினால் 4 அவுன்ஸ் வருமளவிற்கு அல்லது விருப்பத்தைப் பொறுத்து.
4. பச்சை, சிகப்பு, மஞ்சள் அமேரிக்க குடமிளகாய்கள் – தலா 1 – நீள்வாக்கில் வெட்டப்பட்டவை
5. பச்சை மிளகாய் – 5, 6
6.வாதாம் பருப்பு – 10, 15
7.கொத்தமல்லி தழை – அளவு விருப்பத்தை பொறுத்து
8.வெள்ளை வெங்காயம் – அரை – நீள்வாக்கில் வெட்டப்பட்டது
9.பூண்டு – 2 பற்கள்
10.பாஸ்தா – 3 கப் ( 8oz) பாஸ்தா

செய்முறை :

அவரவருக்கு பிடித்த பாஸ்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம். பென்-னி (Penne) பாஸ்தா சீக்கிரம் குழையாது மற்றும் வயிற்றை நிரப்புவதாகவும் இருக்கும்.

கீழ் ஒட்டாத வாணலியில் எண்ணையை விட்டு வெங்காயத்தையும் நசுக்கிய பூண்டையும் வதக்கிக் கொள்ளவும். இதன் மீது முறையே கேரட், குடமிளகாய்கள், காளான் கடைசியாக கீரை ஆகியவற்றை உப்புத் தூவி போட்டு வதக்க வேண்டும். முழுதும் வேகவிடாமல், saute செய்ய வேண்டும்.
இவை பாதியாக வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மிளகாய், கொ.ம.தழைகள் மற்றும் வாதாம் பருப்புகளை ஒரு அரைப்பானில் கொஞ்சமாக உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். விழுது மிகவும் மென்மையாக இல்லாமல் ஓரளவுக்கு கரகரப்பான கலவையாக இருத்தல் நல்லது.
இதற்கு முன் பாஸ்தாவை வேக வைத்து ஒரு வடிப்பானில் நீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை நிமிடங்கள் வேக வைக்க வேண்டும் என்பதை பாஸ்தா உறையிலிருந்து கண்டு கொள்ளலாம். காய்கறிகள் பாதியாக வெந்த பின்னர் அவற்றின் மீது வாதாம் கலவையைப் போட்டு பிரட்டி அதன் மீது பாஸ்தாவை சேர்த்து சில நிமிடங்கள் பிரட்டினால் பாஸ்தா ரெடி.

வாதாம் கலவை பாஸ்தாவிற்கு ஒரு இந்திய ருசியைத் தரும் அதே சமயத்தில் முழுதும் இந்திய உணவாக இராது. பல அமேரிக்க தெற்காசியர்களின் உடல்நலத்திற்கு சரிவராத தேங்காய் கொழுப்பு இல்லாமல் சம ருசியைத்மட்டும் தருவதாக வாதாம் அமைகிறது.
மீந்து போன பாஸ்தா அடுத்த நாள் சாப்பிடும் போது கூடுதல் ருசியுடன் இருப்பதகவும் உணரப்படலாம்.

நன்றி: கொள்ளிடம் வாசன்

Thursday, March 23, 2006

பச்சடிகள் - முப்பது வகை 

நன்றி : அவள் விகடன்

கோடை காலம் வந்துவிட்டால், இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலைதான். விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை கண்காணிப்பது ஒருபுறம் என்றால், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவு வகைகளை தயாரிப்பது இன்னொரு சவால். உங்களுக்கு உதவத்தான் இந்த இணைப்பில் 30 வகை பச்சடிகளை வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். தயிர் கலந்த பச்சடிகளும் பருப்பு சேர்த்து செய்யும் பச்சடிகளும் உணவுக்கு சுவை கூட்டுவதோடு உங்கள் குடும்பத்தாரின் உடல்நலனுக்கும் வலு கூட்டும். பச்சடி செய்து, பசியாற்றுங்கள்! பாராட்டுப் பெறுங்கள்!

தக்காளி- தேங்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத தயிர் 1 கப், தேங்காய் துருவல் அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) 2, பச்சை மிளகாய் 2, இஞ்சி ஒரு சிறு துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத புது தயிர் 1 கப், வெண்டைக்காய் 100 கிராம், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.



கத்தரிக்காய் தயிர்பச்சடி

தேவையானவை: புளிக்காத புது தயிர் 1 கப், சிறிய கத்தரிக்காய் 4, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கி வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு, நன்கு வேகவிட்டெடுங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை எடுத்துவிடுங்கள். பரிமாறும்பொழுது பொரித்த கத்தரிக்காய், அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து, கடுகை தாளித்துக் கொட்டுங்கள். வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த தயிர்பச்சடி.

மாம்பழ தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத புது தயிர் 1 கப், நன்கு பழுத்த மாம்பழம் 1, பச்சை மிளகாய் 1, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) சிறிது, தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை:

மாம்பழத்தை கழுவி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், தேங்காயை கரகரப்பாக அரையுங்கள். இதனுடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த இதமான தயிர்பச்சடி இது.



மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையானவை: மாங்காய் (சற்றுப் புளிப்பானது) 1, சர்க்கரை கால் கப், வெல்லம் பொடித்தது அரை கப், சுக்குத்தூள் சிட்டிகை, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: மாங்காயை தோல்சீவி துருவிக் கொள்ளுங்கள். துருவிய மாங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். கால் கப் தண்ணீரை வெல்லத்துடன் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டுங்கள். மாங்காய் வெந்ததும், அதனுடன் வெல்லத் தண்ணீர், சர்க்கரை, சுக்குத்தூள் சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு கிளறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியில் சேருங்கள். இந்தப் பச்சடி இருந்தால் இன்னும் இரண்டு கவளம் சாதம் உள்ளே போகும்.

வெள்ளரி வெங்காயம் தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத புது தயிர் 1 கப், வெள்ளரி பாதி, பெரிய வெங்காயம் 1, தக்காளி (சற்று கெட்டியாக) 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) சிறிது.

செய்முறை:

வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.

கார்ன்- பீஸ் பனீர் ராய்த்தா

தேவையானவை:

புளிக்காத புது தயிர் 1 கப், பிஞ்சு சோளம் 1, பட்டாணி கால் கப், பொடியாக நறுக்கிய பனீர் கால் கப், பச்சை மிளகாய் 1, பூண்டு (விருப்பப்பட்டால்) ஒரு பல், மிளகுத்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

சோளத்தை உதிர்த்துக்கொள்ளுங்கள். சோளமணிகளையும் பட்டாணியையும் வேகவையுங்கள். பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.

வாழைப்பூ பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், வாழைப்பூ இதழ்கள் 20, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு வையுங்கள் (கறுத்துப் போகாமல் இருக்கும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நான்காக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், வாழைப்பூவையும் சேர்த்து வதக்குங்கள். வாழைப்பூ வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்குங்கள். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பையும் மிளகாய் தூளையும் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான பச்சடி இது.



தக்காளி பச்சடி

தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி (நன்கு பழுத்தது) 4, பச்சை மிளகாய் 2, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை அரை அங்குல வட்டங்களாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் கொத்துப் பருப்பாக வேகவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். சற்று வதங்கியதும் தக்காளி, உப்பு சேருங்கள். 10 நிமிடம் வதங்கியதும், புளிக்கரைசலை அதில் ஊற்றுங்கள். அத்துடன் மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்ததும் பருப்பையும் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இந்தப் பச்சடி டிபன், சாதம் இரண்டுக்குமே ஏற்ற சூப்பர் ஜோடி.

சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை:

சுண்டைக்காய் (பிஞ்சாக) அரை கப், துவரம்பருப்பு அரை கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 5, புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். சுண்டைக்காயை அம்மியில் வைத்து தட்டிக்கொள்ளுங்கள். அம்மி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் ஒரு நிமிடம் ஓடவிட்டு எடுத்து, புளித்தண்ணீரில் போட்டு வையுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், அத்துடன் சுண்டைக்காயை புளித் தண்ணீரிலிருந்து எடுத்து சேருங்கள். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரையும் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபிறகு, பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி இது.



குடமிளகாய் பச்சடி

தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், குடமிளகாய் 2, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, எலுமிச்சம்பழச் சாறு 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய்தூள் (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குடமிளகாயை விதைகளை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேருங்கள். நிதானமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள், பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

உருளைக்கிழங்கு பச்சடி

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப், உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, தக்காளி 4, பச்சை மிளகாய் 5, புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) 3 பல் அல்லது பெருங்காயம் அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். உருளைக்கிழங்கு, வெங்காயம் இரண்டையும் தோல்நீக்கி பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். ஐந்து நிமிடம் வதங்கியபின், உருளைக்கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். கிழங்கு அரைப்பதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து, அது கரையும் வரை நன்கு வதக்குங்கள்.

பிறகு, புளியை அரை கப் தன்ணீரில் கரைத்து ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் பருப்பை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். (பெருங்காயத்துக்கு பதில் பூண்டை சேர்ப்பதானால், பூண்டை நசுக்கி, வெங்காயம் வதக்கும்போது சேர்த்து வதக்கவேண்டும்). சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.



அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி

தேவையானவை:

நன்கு பழுத்த சிவப்பான தக்காளி அரை கிலோ, அன்னாசிப்பழம் 1 கீற்று, சர்க்கரை சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் சில துளிகள், கார்ன்ஃப்ளார் 1 டீஸ்பூன்.

செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்ததும், இறக்கி ரோஸ் எசன்ஸ் சில துளிகள் விட்டுப் பரிமாறுங்கள். குட்டீஸ§க்குப் பிடித்தமான இந்தப் பச்சடி, பிரெட் முதல் பீட்ஸா வரை எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.

கொத்துமல்லி பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், மல்லித்தழை பெரிய கட்டாக 1, பெரிய வெங்காயம் 1, தக்காளி 1, பச்சை மிளகாய் 2, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவையுங்கள். மல்லித்தழையை சுத்தம் செய்து, வேர் நீக்கி இளங்காம்பாக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் முக்கால் பாகம் மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக்கரைசலை சேர்த்து, அத்துடன் மிளகாய்தூளையும் போட்டு, சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பச்சைவாசனை போனதும் துவரம்பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மல்லி மணத்துடன் கமகமக்கும் இந்தப் பச்சடி, எந்த உணவுக்கும் ஏற்ற சூப்பர் ஜோடி.

பூந்தி தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், காரபூந்தி அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) 6, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.

பீட்ரூட் இனிப்பு பச்சடி

தேவையானவை:

பீட்ரூட் கால் கிலோ, சர்க்கரை சுவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு 8, திராட்சை 12, ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 1 டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பீட்ரூட்டை தோல்நீக்கி துருவிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, முந்திரி, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலை சேர்த்து பத்து நிமிடம் வதக்குங்கள். வதக்கிய பின், இறக்கி ஆறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேருங்கள். நன்கு கொதித்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். ஐந்து நிமிடம் கொதித் ததும், ஏலத்தூள் சேர்த்து இறக் குங்கள். விருந்து களில் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும் இந்த பச்சடி.

வாழைக்காய் பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், வாழைக்காய் 1, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 2, சாம்பார் பொடி 1 டீஸ்பூன், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவையுங்கள். வாழைக்காய், வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் வாழைக்காய், தக்காளி சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசல், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். வாழைக்காயில் ஒரு வித்தியாசமான, சுவையான சைட்டிஷ்.

பாகற்காய் பச்சடி

தேவையானவை:

பாகற்காய் கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பூண்டு 8 பல், இஞ்சி ஒரு துண்டு, புளி நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் 6, வெல்லம் ஒரு சிறு துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் கால் கப்.

செய்முறை:

பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள். மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். நன்கு வதங்கியபிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டி யான பிறகு இறக்குங்கள். இஞ்சி, பூண்டு மணமும் இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளும் சேர்ந்து ஒரு கலக்கல் சுவை தரும் பச்சடி இது.

கொத்தவரங்காய் பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், கொத்தவரங்காய் 100 கிராம், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவையுங்கள். கொத்தவரங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங்காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்... ‘கொத்தவரங்காயில் இப்படி ஒரு பச்சடியா?’ என்று வியப்பீர்கள்.

கேரட் - முளைப்பயறு பச்சடி

தேவையானவை:

கேரட் 1, முளைக்கவைத்த பாசிப்பயறு அரை கப், பசுமஞ்சள் (பச்சை மஞ்சள்) ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு சிறிது.

செய்முறை:

கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். பசும் மஞ்சளையும் மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு, உப்பு கலந்து பரிமாறுங்கள். (பொங்கல் சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்).

முத்து பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், மாதுளை முத்துக்கள் அரை கப், வேகவைத்த பட்டாணி கால் கப், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 3, பச்சை மிளகாய் 2. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை:

பச்சை மிளகாய், தேங்காய், முந்திரி மூன்றையும் அரைத்து, உப்பு சேர்த்து தயிரில் கலக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து தயிர் கலவையில் சேருங்கள். இவற்றோடு பட்டாணி, மாதுளையைக் கலந்து பரிமாறுங்கள். பச்சை, சிவப்பு முத்துக்கள் பளிச்சிடும் இந்த ‘முத்து பச்சடி’, குழந்தைகளின் சாய்ஸாக இருக்கும்.

வாழைத்தண்டு தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) அரை கப், முளைவிட்ட பாசிப்பயறு கால் கப், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.

செய்முறை:

பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். வாழைத்தண்டை ஆவியில் 5 நிமிடம் வேக வையுங்கள். இவை எல்லாவற்றுடனும் தயிர், உப்பு கலந்து பரிமாறுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது இந்த தயிர்பச்சடி. (இன்னொரு வகை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பச்சையாகக் கலந்து, உப்பு, தயிர் சேர்த்தும் பச்சடி செய்யலாம்)

மாங்காய் இஞ்சி கொண்டைக்கடலை பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், குடமிளகாய் (சிறியது) 1, கொண்டைக்கடலை (ஊற வைத்தது) கால் கப், மாங்காய் இஞ்சி 2 துண்டு, சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 5, புளி நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மாங்காய் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். குடமிளகாயை பொடியாக நறுக்குங்கள். சின்னவெங்காயத்தையும் தோலுரித்து பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மாங்காய் இஞ்சி, குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பு, கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். செட்டிநாட்டு திருமண விருந்தில் இந்தப் பச்சடி மிகவும் பிரபலம்.

கீரை தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத புது தயிர் 1 கப், முளைக்கீரை அரை கட்டு, பச்சை மிளகாய் 2, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: சீரகம் அரை டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய்முறை: கீரையை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள். குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேகவைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். நன்கு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான சுவையில் உங்களை அசத்தும் இந்த கீரை தயிர்பச்சடி.

கத்தரிக்காய் முருங்கைக்காய் பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், முருங்கைக்காய் 1, கத்தரிக்காய் 2, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, தக்காளி 3, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு 1 சிட்டிகை, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். முருங்கைக்காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய், முருங்கைக்காய், உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி காய்க் கலவையில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபின் பருப்பை சேர்த்து இறக்குங்கள். பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார்பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். மணமாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் ருசியாக இருக்கும் இந்தப் பச்சடி.

பச்சை மிளகாய் பச்சடி

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப், பச்சை மிளகாய் 50 கிராம், சின்ன வெங்காயம் 10 அல்லது பெரிய வெங்காயம் 1, புளி நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். பச்சை மிளகாயை கால் அங்குல அளவுக்கு வட்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்குங்கள் (பெரிய வெங்காயம் என்றால் பொடியாக நறுக்குங்கள்). எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து பொன்னிறமானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள். சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். கட்டுசாதத்துக்கும் தயிர்சாதத்துக்கும் டக்கரான ஜோடி இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கொத்துமல்லி தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், மல்லித்தழை 1 கட்டு, பச்சை மிளகாய் 2, முந்திரிப்பருப்பு 5, இஞ்சி 1 துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை:

மல்லித்தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி மூன்றையும் நைசாக அரைத்தெடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தயிர், உப்பு சேர்த்து, கடுகு தாளித்து அதனோடு கலந்து பரிமாறுங்கள்.

இஞ்சி பச்சடி

தேவையானவை:

இஞ்சி 50 கிராம், பச்சை மிளகாய் 5, புளி எலுமிச்சை அளவு, வெல்லம் சிறிய துண்டு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன்.

செய்முறை:

இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் இஞ்சியையும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இஞ்சி வதங்கியபின் புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போன பிறகு, வெல்லம் சேர்த்து, சற்றுக் கெட்டியான பதத்தில் இறக்குங்கள். தயிர்சாதத்துக்கு இந்த பச்சடி இருந்தால், வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் உங்கள் நாக்கு.

மாங்காய் பருப்பு பச்சடி

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப், கிளிமூக்கு மாங்காய் 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, வெல்லம் சிறிய துண்டு, புளித் தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், மாங்காய், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு உப்பு, புளித் தண்ணீர், பருப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மாதா ஊட்டாத சோறை, இந்த ‘மாங்காய் பருப்பு பச்சடி’ ஊட்டும்.

புதினா வெங்காய தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், பெரிய வெங்காயம் 3, புதினா 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள். புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில் சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள். பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.

சில்மிஷ தமிழ்முரசு 




இவ்வளவு சத்துள்ள பானத்திற்கு தமிழ்முரசு கொடுத்திருக்கும் தலைப்பைப் பாருங்களேன்.

குறும்புதான். !!!!!

அன்னாசி மோர்க்குழம்பு 

தேவையானவை:

சற்று புளித்த தயிர் 1 கப், பைனாப்பிள் 1 துண்டு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. அரைக்க: தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

மோரை கடைந்து கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு மீதியை மோருடன் சேருங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பைனாப்பிளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, எடுத்து வைத்திருக்கும் (அரைத்த) விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள். பாதியளவு எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, அதில் வேகவைத்த பைனாப்பிள், கரைத்த மோர் சேருங்கள். நன்கு கிளறிக்கொண்டே ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மீதமுள்ள எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை பொரித்து சேருங்கள்.


கேரளாவில் மட்டுமே செய்யப்படும் மோர்க்குழம்பு இது.

உண்ணி அப்பம் 


தேவையானவை:

பச்சரிசி மாவு 2 கப், கோதுமை மாவு அரை கப், வெல்லம் (பொடித்தது) 3 கப், பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய் கால் கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நன்கு பழுத்த பூவன் வாழைப்பழம் 1, நெய் சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு, ஆப்பசோடா கால் டீஸ்பூன்.



செய்முறை:

அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சிறிதளவு நெய்யில் தேங்காயை சிவக்க வறுத்து அதனுடன் சேருங்கள். வாழைப்பழத்தை தோலுரித்து மிக்ஸியில் அடித்து மாவுக்கலவையில் ஊற்றுங்கள். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும், வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள்.

குழிப்பணியார சட்டியைக் காயவைத்து ஒவ்வொரு குழிக்கும் சிறிது எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, முக்கால் குழிக்கு மாவை ஊற்றி, சிறு தீயில் வைத்து, மூடி போட்டு நன்கு வேக விட்டு திருப்பிவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். பஞ்சு போன்றிருக்கும் இந்தப் பணியாரம், கேரள விருந்தில் இடம்பெறும் முக்கியமான இனிப்பு. அப்பம் இல்லாத பண்டிகையும் அங்கே இல்லை.

மலபார் அவியல் - அடைக்கு உகந்தது 


தேவையானவை:

முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) கால் கிலோ, கேரட் (கலருக்காக) 1, தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், புது தயிர் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கு. அரைக்க: தேங்காய் சிறியதாக 1, பச்சை மிளகாய் 3, சீரகம் 1 டீஸ்பூன்.


செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, சற்று கரகரப்பாக (தண்ணீர் ஊற்றாமல்) அரைத்து எடுங்கள். அரைத்த விழுதை காய்கறியுடன் சேர்த்து, அதோடு தயிர், எண்ணெய், கறிவேப்பிலை கலந்து பரிமாறுங்கள். ஹோட்டல்கள் முதல் விருந்துகள் வரை பிரபலமான கேரள ஸ்பெஷலான இந்த ‘மலபார் அவியல்’, அடைக்கு நல்ல ஜோடி.

Monday, March 20, 2006

பக்கோடா - வடை - பாதாம்கீர் 

தூள் பக்கோடா

கடலைமாவு ஒரு கப், அரிசி மாவு கால் கப்தேவை. இதுலநல்லா மூணு கப் அளவு வெங்காயம் சின்னதாநறுக்கிப்போடலாம்.4பச்சைமிளகாய்.நிறைய கொத்தமல்லித்தழை பொடியா நறுக்கிப்போடணும்.கொஞ்சம் புதினாஇலைகருவேப்பிலை இஞ்சி சேர்க்கலாம்.இதெல்லாம் போட்டு அரைகரண்டி ரி·பைண்ட்எண்னை காச்சி விட்டு தண்ணீரெ ஊற்றாமல் ஒருமணி ஊறவச்சி அப்புறமாஎண்னையில்உதிர்த்தாற்போல போட்டால் க்ரிஸ்ப்பா வரும்.வெங்காயமும் மற்றபதார்த்தங்களும்தானாகவே நீர் சேர்த்துவிடுவதால் இதை இப்படிச் செய்தால் சூப்பர வரும்.'

ஆமைவடை

ஒருகப் கடலைப்பருப்புன்னா அரை கப் பயற்றம்பருப்பு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பு இவைகளை ஊறவச்சி அறைக்கிறபோதுஉப்பு காரம் பெருங்காயம் சேர்க்கணும், மாவுல அரைகரண்டி தேங்காயெண்னைகலந்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வடை செஞ்சா ஜோரா வரும்.

கீரைவடை

உளுத்தம்பருப்புதான் தேவை. ஒரு கப்புக்கு 2 ஸ்பூன் அரிசி சேர்த்துஊறவச்சிகொஞ்சமா அவுல் போட்டு உப்பு போட்டு மைய அறைச்சி அதுல பொடியாநறுக்கியவெங்காயம் கட் செஞ்சகீரை ஒருகப், இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்துமிக்ஸில ஒரே ஒரு சுத்து சுத்தி எடுக்கணும்இதேபோல கோஸ், கேரட் துருவுப்போட்டுகூட இதே மாதிரி செய்யலாம்

பாதாம் கீர்

பாதாம் பத்து முந்திரி பத்து எடுத்து சுடற நீரில் ஒருமணி நேரமாவதுஊறவக்கணும்குக்கர்ல சாதம் வைக்கும்போதே ஒருதட்டுல 2 கேரட் கட் செஞ்சி வேகவச்சிஎடுத்துவச்சிக்கணும். இப்போ வெந்த கேரட்டுடன் தோல் உறிச்ச பாதாம்பருப்புமுந்திரிபருப்புகளை பால் விட்டு சட்னி பதத்துல மிக்ஸில அறைச்சிகக்ணும்.பால் ஒருலிட்டர் எடுத்து காச்சி அதில் ஒரு கப் அலல்து ஒரு டம்ளர்சக்கரைபோட்டுகொதிக்கவிடவும். 10நிமிஷம் கொதிச்சதும் அறைத்த விழுது சேர்த்துஎல்லாமாய்5நிமிஷம் கொதித்ததும் ஏலம் போடணும் ·ப்ரிட்ஜிலவச்சிக்குடிக்கலாம்.

நன்றி - மரத்தடி ஷைலஜா

கேசரி & எலுமிச்சைசாதம் 

கேசரி.

தேவை:

மீடியம் ரவை(இந்தியாவில் பம்பாய்ரவை என்பார்கள்) ஒரு காபி கோப்பைஅளவு என்றால் அதற்கு ஒன்றரை கோப்பை சக்கரை. இதெ அளவு நெய் முந்திரி ஏலம் வாசனைக்கு, அரைகோப்பைபால், தண்ணிர் தேவையான அளவு, கேசரிகலர்பவுடர் சிறிது.

செய்முறை :

முதலில் ரவையில் ஒரு கோப்பை நெய் விட்டு பொன்னிறமாவறுக்கணும் முதலிலேயெ நெய் அதிகம் விடுவது நல்லது,பிறகு அது மூழ்கும்வரை எடுத்துவைத்தபால் கலந்த சுடுநீர்(அல்லதுமுழுவதுமே நீராகவும் இருக்கலாம்) ஊற்றி அடுப்பை நிதான எரிச்சலில் மூடவும், ரவை 5 நிமிடத்தில் வெந்து விடும். பிறகு சக்கரை சேர்க்கவும்,கலர்பொடி தூவவும்.அடுப்பு சற்று பெரிதா எரியட்டும்,மீத நெய் விடவும். பாயச நிலையில் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிட்டு தளர்ந்திருக்கும் ரவைகரைசலை மூடி10நிமிடம் வைக்கவும்,பிறகு திறந்தால் பதமான கேசரி இருக்கும் இதில் வறுத்த முந்திரி சேர்க்கவும், த்ராட்சையும் போடலாம். நெய்யை முதலிலேயே சேர்க்க வேண்டும். அப்பொதான் அது சுடுநீர்ல ரவை கட்டி ஆவதை தடுக்கும்மேலும் அந்த நெய் கேசரியில் பிறகு ஊறிக்கொள்ளும்.

எலுமிச்சைசாதம்

சாதம் பொலபொலன்னு தட்டில பரத்தி லேசா உப்பு நல்லெண்னை கலந்து ஆறவைக்கணும். இதுல வேக வச்சபச்ச பட்டாணி இருந்தா போடலாம் வெந்த உருளைகிழங்கை குட்டியா சதுர நறுக்கலாய் கலக்கலாம். குடமிளகாயைவதக்கிப் போடலாம்,முந்திரி கடல வறுத்து சேர்ப்பது அவசியம்.மற்றவை இருந்தால் சேர்க்கலாம் இல்லேன்னா பரவால்ல. சாதத்தின்மேல் மஞ்சள்பொடிதூவிவிடவும் பிறகு எண்ணையில் கடுகு உ பருப்பு,க பருப்பு பச்சைமிளகாய்1, வற்றல்மிளகாய்1 கிள்ளிப்போட்டு பெருங்காயம் சேர்த்துதாளீக்கவும்,கருவேப்பிலை கொத்தமல்லி கட் செய்து போடணும்.உப்புபோட்டு எலுமிச்சை சாறைவிட்டுக்கலந்து வைக்கணும், கடைசியா சிறிது வறுத்துப்பொடி செய்த வெந்தயப்பொடி தூவணும் இதுவே எலுமிச்சைசாதத்தின் சுவையைக்கூட்டி மணம் நிரம்பக் கொடுக்கும்.வெந்தயபொடி அதிகமாபோட்டுட்டா கசந்துடும் அரைதேக்கரண்டி போதும்

நன்றி: மரத்தடி ஷைலஜா

குறிப்புகள் - 


******கொழுக்கட்டை பிடிக்க வரவில்லையா?

கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.

******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா?

பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'

******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,

முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)

******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.

******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.

******பரோட்டா செய்யும் பொழுது(ஆலூ, மூலி, கோபி எதுவாக இருந்தாலும்)ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.

******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா? இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.


********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********!!!!

வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;)) நிஜமாகவே

ரெசிபி

தவலை தோசை

1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).

4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.

5. பாராட்டைப் பெறவும்.

தவலை அடை

செய்முறை ஒன்று

1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.

2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்

.3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

செய்முறை இரண்டு

1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.

3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.

5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :P

நன்றி பெங்களூர் பிரபா

Monday, March 13, 2006

முப்பது வகை போண்டா 

வெஜிடபிள் போண்டா



தேவையானவை:

(மேல் மாவுக்கு) கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு 1, கேரட் 1, பீன்ஸ் 4, பட்டாணி ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

தவலை வடை

தேவையானவை:

பச்சரிசி அரை கப், கடலைப்பருப்பு அரை கப், பாசிப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு அரை கப், ஜவ்வரிசி ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது கால் கப், காய்ந்த மிளகாய் 6, துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.

மைசூர் போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, மிளகு 2 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

மசால் வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப், சின்ன வெங்காயம் அரை கப், புதினா சிறிது, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 2 பல், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 1, சோம்பு அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் தலா 2.

செய்முறை:

பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

மெது போண்டா

தேவையானவை:

கடலை மாவு 1 கப், டால்டா 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6, ஆப்ப சோடா கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

கீரை வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை 1 கட்டு, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.

மங்களூர் போண்டா

தேவையானவை:

மைதா மாவு 1 கப், சற்று புளித்த தயிர் அரை கப், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

பொட்டுக்கடலை வடை


தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப், பச்சரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

தாளிச்ச போண்டா

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், பச்சரிசி 1 கப், உளுத்தம்பருப்பு முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.

கல்கண்டு வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி கால் கப், கல்கண்டு ஒன்றேகால் கப், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

கார்ன் போண்டா


தேவையானவை:

சோளம் 2, மைதா 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசியான, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.

புதினா- மல்லி வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு முக்கால் கப், கடலைப்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், புதினா அரை கட்டு, மல்லித்தழை அரை கட்டு, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.

பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை:

பாசிப்பருப்பு 1 கப், துருவிய சுரைக்காய் அரை கப், துருவிய இஞ்சி 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.
ஜீரா வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், சர்க்கரை 1 கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.

கேசரி போண்டா

தேவையானவை:

(கேசரிக்கு) ரவை அரை கப், சர்க்கரை 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் சிறிது. (மேல் மாவுக்கு) மைதா ஒன்றரை கப், பால் அரை கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை இதில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

புளிப்பு கார வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8, புளி சிறிய உருண்டை, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய்
தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

மெதுவடை


தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வடித்த சாதம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

உருளைக்கிழங்கு போண்டா


தேவையானவை:

கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) 1 சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.
பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

ஸ்பெஷல் வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வெங்காயம் அரை கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

கலவை பருப்பு வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு கால் கப், பச்சரிசி 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெங்காய வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) அரை கப், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

ஜவ்வரிசி போண்டா

தேவையானவை:

ஜவ்வரிசி 1 கப், நன்கு புளித்த தயிர் 1 கப், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், பொரித்த கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

கார போண்டா

தேவையானவை:

பச்சரிசி அரை கப், புழுங்கலரிசி அரை கப், துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

தயிர்வடை


தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், புளிக்காத புது தயிர் 1 கப், பால் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் தேவையான அளவு, கேரட் துருவல் 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன்.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

கோஸ்வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

ரச வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.
ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் 2 கப், புளித் தண்ணீர் அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
பொடிக்க: மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

இனிப்பு போண்டா

தேவையானவை:

ரவை முக்கால் கப், பச்சரிசி மாவு கால் கப், பொடித்த வெல்லம் 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

சாம்பார் வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை கால் கப், எண்ணெய் தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, புளி நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, வெந்தயம் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.
பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.
சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

பருப்பு போண்டா

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பாசிப்பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, பூண்டு 5 பல்.
அரைக்க: சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2.

செய்முறை:

பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

இட்லி மாவு போண்டா

தேவையானவை:

இட்லி மாவு 2 கப், சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, தேங்காய் துருவல் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைபருப்பு 2 டீஸ்பூன்.

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.


உப்பு - வெல்ல - அடைகள் 



உப்பு அடை :

தேவையானவை:

பச்சரிசி ஒரு கப், வெள்ளை காராமணி 1 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் சிறிது, பாசிப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, உப்பு
தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை சன்ன ரவையாக உடைக்கவும். காராமணியை லேசாக வறுத்து, ஊற வைக்கவும். குறைந்தது 4 மணி நேரமாவது ஊறிய பிறகு, குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் 2 கப் (ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்) தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு போடவும். அத்துடன் வெந்த காராமணியையும் சேர்க்கவும்.

தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். நன்கு கெட்டி ஆனதும் இறக்கவும். (கவனிக்கவும்: உப்புமா போல ரவை முழுவதுமாக வெந்துவிடக்கூடாது). ஆறிய பிறகு, இந்த மாவை கையால் மெல்லிய அடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும்.

அரிசியை நன்கு சிவக்க வறுத்து, ரவையாக உடைத்து செய்தால் அடைகள் நன்கு வாசமுடன் இருக்கும். காராமணி கொஞ்சமாகப் போட்டால் போதும். பாசிப்பருப்பு போடாமலும் இதை செய்யலாம்.

வெல்ல அடை :

தேவையானவை:

பச்சரிசி ரவை 1 கப், பொடி செய்த வெல்லம் ஒன்றரை கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் வாணலியில் 2 கப் தண்ணீர் வைத்து, ஏலக்காய்தூள், வெந்த காராமணி சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைப் போட்டுக் கிளறவும். ரவை நன்கு வேகவேண்டும். பிறகு, வெல்லத்தூளில் கால் கப் தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும். கொஞ்சம் கெட்டிப் பாகாக வந்ததும், அதை வெந்த ரவையில் சேர்த்துக் கிளறவும். ஆறியபிறகு, அடைகளாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைக்கவும். இரண்டு அடைகளையும் செய்து வரப் போகும் நோன்புக்கு அசத்துங்கள்.

ரவை வெந்தபிறகுதான், வெல்லப்பாகை ஊற்றிக் கிளறவேண்டும். வெல்லப்பாகு ஊற்றிவிட்டால், பிறகு ரவை வேகவே வேகாது. இனிப்பு தூக்கலாக விரும்புபவர்கள், இன்னும் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

புட்டு + கடலை கறி 

இதுவும் மள்ளு ஸ்பெஷல்


புட்டு :



தேவையானவை:

புட்டரிசி 4 கப், உப்பு சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு.

செய்முறை:

அரிசியை கழுவி, ஊறவைத்து, ஊறியதும் நிழலில் உலர வையுங்கள். சற்று ஈரமிருக்கும்போதே மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை சிறிது சிறிதாக வறுத்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து, உப்பு கரைத்த தண்ணீரை தெளித்துப் பிசறுங்கள். இந்த மாவு சற்று ஈரமாக இருக்க வேண்டும்.
குழாய்ப்புட்டு குழாயில் இரண்டு கை மாவைப் போட்டு, அதன் மேல், சிறிது தேங்காய் துருவலை போடுங்கள். மீண்டும், மாவு, தேங்காய் என்ற வரிசையில் போட்டு, குழாயை நிரப்புங்கள். குழாய்ப்புட்டு பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, புட்டுக் குழாயை வைத்து, வேகவிடுங்கள். குழாயின் மேலே ஆவி வந்ததும் எடுத்துப் பரிமாறலாம். கடலைக் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவையோ சுவை!

கடலை கறி :



தேவையானவை:

கறுப்பு கொண்டை கடலை 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், தனியா தூள் 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், புளி தண்ணீர் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க:

பட்டை 2 துண்டு, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

கொண்டை கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை நன்கு ஊறவிடுங்கள். ஊறிய கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீரை சேர்த்து, அதனுடன் கொண்டை கடலையையும் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். கடைசியில் சிறிது கறிவேப்பிலை சேருங்கள். புட்டும் கடலைக் குழம்பும் கேரள உணவுகளில் நம்பர் ஒன் காம்பினேஷன்.

Wednesday, March 08, 2006

பாலட பிரதமன் - மள்ளு ஸ்பெஷல் 



தேவையானவை:

பால் 1 லிட்டர், பாலடை (எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கும்) 50 கிராம், சர்க்கரை ருசிக்கேற்ப, ஏலக்காய் தூள் சிறிது.

செய்முறை:

3 டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வையுங்கள். கொதிக்கும் தண்ணீரில் பாலடையை சேருங்கள். பாலடை வெந்ததும் வடிகட்டி, பச்சை தண்ணீரில் 4 அல்லது 5 முறை அலசுங்கள். பாலைக் காய்ச்சுங்கள். காய்ச்சிய பால் முக்கால் பாகமாக ஆனதும், அடையையும் தேவையான சர்க்கரையையும் சேர்த்து, மேலும் நன்கு கொதிக்க விடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேர்த்து, பரிமாறுங்கள். பால் வாசனைதான் இதில் முக்கியம். எனவே, பாலை நன்கு காய்ச்சிக் குறுக்கவேண்டும்.

Friday, March 03, 2006

பருப்புப் பொடி 

தேவையானவை:

பொட்டு கடலை & அரை கப், காய்ந்த மிளகாய் & 6, கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், பூண்டு & 2 பல், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டீஸ்பூன்.

செய்முறை:

சீரகம், கடுகை எண்ணெயில் பொரித்தெடுங்கள். மிளகாயை வெறும் கடாயில் வறுத்தெடுங்கள். மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சற்று கரகரப்பாக பொடியுங்கள். சூடான சாதத்துக்கு நெய்யுடன் பரிமாறினால், கூடவே இரண்டு கவளம் உள்ளே இறங்கும். ஆந்திரத்தில், பந்தியில் முதலிடம் பருப்புப் பொடிக்கே

இது ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி .

திப்பிலி ரசம் 

தேவையானவை:

(பொடிக்க) திப்பிலி, தேசாவரம் _ தலா 10 கிராம், மிளகு, சீரகம், மல்லி, துவரம்பருப்பு _ தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் _ 5, பூண்டு _ 3 பல், புளி _ சிறிய எலுமிச்சை அளவு, உப்பு _ தேவைக் கேற்ப.
தாளிக்க: நெய் _ 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் & தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை.



செய்முறை:

மேலே கூறியுள்ள பொடிக்க வேண்டிய பொருட்களை (பூண்டு, புளி தவிர) எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்து, பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து, அந்தக் கரைசலில் பொடித்த ரசப்பொடியைப் போட்டு, பூண்டுப் பற்களை நசுக்கிச் சேர்த்து, உப்புடன் நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் மேலும் நீர் சேர்த்து நுரைக்கவிட்டு நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். விறுவிறுப்பான குளிர்கால ரசம் ரெடி. பனியினால் ஏற்படும் உடம்பு வலி பறந்து விடும். இதற்கு தேவையான திப்பிலியும் தேசாவரமும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அளவு ஜாஸ்தியாகி விட்டால், கசந்துவிடும். கொஞ்சமாகப் பார்த்துப் போடவேண்டும்.

வெந்தயக் குழம்பு 

தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் 4 டேபிள்ஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் _ 1 கப், பூண்டு _ 15 பல், வத்தக்குழம்பு பொடி _ 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு _ _ அரை டீஸ்பூன், கறிவேப்பிலை _ சிறிது, எண்ணெய் _ 6 டேபிள்ஸ்பூன், உப்பு _ தேவையானது, தேங்காய் துருவல் _ 2 டேபிள்ஸ்பூன், புளி _ பெரிய எலுமிச்சை அளவு.



செய்முறை:

வெந்தயத்தை ஊறவைத்து, நீரை வடித்து துணியில் கட்டிவைத்தால் மறுநாள் முளை விட்டிருக்கும். முளைகட்டிய வெந்தயத்தில் பாதியை, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகைப் போடவும். வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த வெங்காயம், பூண்டு, மீதி உள்ள முளைவிட்ட வெந்தயம் என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். கடைசியில், வத்தல் குழம்புப் பொடியை போட்டுக் கிளறவும். அடுத்து ஊற வைத்த புளியை கரைத்து விட்டு, உப்பைப் போட்டு கொதிக்க விடவும். பாதி கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெய் லேசாக பிரிந்து நிற்பதுதான் நன்றாகக் கொதி வந்ததற்கு அடையாளம். இந்தக் குழம்பை சூடான சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நார்ச்சத்து மிக்க இந்தக் குழம்பு, இரண்டு நாள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வத்தல் குழம்புப் பொடி செய்வது எப்படி..??

‘‘காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் 2 கப், தனியா 4 கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், மிளகு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் (விருப்பப்பட்டால்) 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், விரலி மஞ்சள் 2. இவை எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் வத்தக் குழம்பு பொடி. வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்பு போன்றவற்றை வைக்கும்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிதங்களைப் போட்டு, இந்த வத்தக் குழம்புப் பொடியில் 2 டீஸ்பூன் போட்டு, லேசாக வறுத்த பிறகு புளிக்கரைசலை சேருங்கள். குழம்பின் மணம் வீட்டைத் தூக்கும்.’’

குடமிளகாய் பச்சடி 

தேவையானவை:

பெரிய குடமிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் தலா 1, பாசிப்பருப்பு கால் கப், புளி சுண்டைக்காய் அளவு, சாம்பார்பொடி 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.



செய்முறை:

பாசிப்பருப்பை வேக வைக்கவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போதே, பொடியாக நறுக்கிய குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும், புளியை கரைத்து ஊற்றி, சாம்பார்பொடி போடவும். உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சேர்ந்தாற் போலிருக்கும் இந்தப் பச்சடி, சப்பாத்தி, பூரிக்கும் நல்ல காம்பினேஷன். சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
பாசிப்பருப்புக்கு பதிலாக துவரம்பருப்பு போட்டும் இந்த பச்சடியை செய்யலாம். சுவை மாறுவதில்லை.

கொய்யா பர்ஃபி 

தேவையானவை:

நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் 5, சர்க்கரை மூன்றரை கப், வெண்ணெய் கால் கப், சிட்ரிக் ஆசிட் 1 கிராம், உப்பு அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) 5.



செய்முறை:

பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும். நன்கு கெட்டிப்பட்டதும் நெய் பூசிய ஒரு தட்டில் கொட்டி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இப்பொழுது சூடான கொய்யா பர்ஃபி தயார். மிகவும் கனிந்துவிட்ட கொய்யா பழங்களை வீணாக்காமல், இந்த முறையில் பர்ஃபி செய்யலாம். சூப்பர் டேஸ்ட்!

வாழைப்பூ வடை 

இது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஸ்ரீவித்யா மற்றும் மம்மூட்டியுடன் நடித்து இருக்கிறது. ;-)



தேவையானவை:

வாழைப்பூ 1 (ஆய்ந்தது), உருளைக் கிழங்கு 2 (பெரியது), பொட்டுக்கடலை 50 கிராம், பிரட் துண்டுகள் 4, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 2, தனி மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கறி வேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) சிறிது.


செய்முறை:

வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையை நன்கு பொடிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரட் துண்டுகளை நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் நைசாக அரைத்து கொள்ளவும். இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு நன்கு பிசறவும். கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை போடவும் (தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்). எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, விரும்பிய வடிவத்தில் வடை போல் தட்டி எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கலாம். இது மாலை நேரத்துக்கான, சத்து மிகுந்த டிபன்.

வாழைப்பூவின் துவர்ப்பு சுவை பிடிக்காதவர்கள், உருளைக்கிழங்கின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்.கட்லெட்டை வேகவைக்கும்போது, அடுப்பை ஸிம்மில் வைத்து, நிதானமாக வேகவிடுங்கள். இல்லையென்றால், வெளியே சிவந்திருக்கும். உள்ளே அப்படியே வேகாமல் இருக்கும்.

நூக்கல் வடை 



தேவையானவை:

நூல்கோல் 2, பொட்டுக்கடலை மாவு 1 கப், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, பெரிய வெங்காயம் 3, கறிவேப்பிலை சிறிது, பூண்டு 10 பல், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, கடுகு தாளிக்க.

செய்முறை:

நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர் விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். இதில் கொத்து மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிப் போட்டு, காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு, சிவக்க வேக வைத்தெடுங்கள். வடையாகத் தட்டாமல், அப்படியே உதிராகவும் பரிமாறலாம். இந்த நூல்கோல் புட்டு, சூடாக சாப்பிட சுவை அள்ளும்.

கலவை இளக்கமாக இருந்தால் பொட்டுக்கடலைப் பொடியை அதிகமாகப் போட்டுக்கொள்ளுங்கள். நூல்கோல் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கும் இதன் ருசி.

Thursday, March 02, 2006

முப்பது வகை கிழங்கு உணவுகள் 

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:

உருளைக்கிழங்கு பெரியதாக 2, சர்க்கரை அரை கப், நெய் 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ் 5 சொட்டு.

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, கட்டி இல்லாமல் கைகளால் பிசையவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொண்டு, கம்பிப்பாகாக காய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய்யை சேர்த்து கிளறி, கடைசியில் சிறிது குங்குமப்பூ சேர்க்கவும். பின்னர் சிறிது ஆறியதும் பாதாம் எசன்ஸ் விட்டு கிளறவும். இது பாதாம் அல்வாவின் ருசியைக் கொடுக்கும்.



உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் ஒன்றரை கப், தக்காளி சாஸ் 4 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி ஒரு விரல் நீளம் + அகலத்துக்கு நறுக்கி, கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து அரைப்பதமாக வேகவைக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, ஆறியதும் வாணலியில் எண்ணெயை சுடவைத்து, வேகவைத்த கிழங்கை பொன்னிறத்தில் சற்று மொறுமொறுவென பொரித்தெடுத்து அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்.

பனங்கிழங்கு குருமா

தேவையானவை: இளசான பனங்கிழங்கு 2, உருளைக்கிழங்கு 1, பெரிய வெங்காயம் 1, எலுமிச்சம்பழச்சாறு கால் டீஸ்பூன், தக்காளி 1, மல்லித்தழை சிறிது.
விழுதாக அரைக்க: பச்சை மிளகாய் 12, தேங்காய் 1 மூடி, பொட்டுக்கடலை 4 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் 8 டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடித்தது 1 சிட்டிகை.

செய்முறை: பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து, பின் சிறு சதுரங்களாக (சுண்டைக்காய் அளவு) நறுக்கவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை அரைத்தெடுக்கவும். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து, அதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும் (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொள்ளவும்). அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து 10 நிமிடத்தில் பனங்கிழங்கை சேர்க்கவும். குருமா சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை தூவி இறக்கி கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை ஊற்றி கலந்து பரிமாறவும்.

உருளைக்கிழங்கு குழம்பு

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 1, சின்ன வெங்காயம் 10, பூண்டு 10 பல், தக்காளி 1, புளி பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி 4 டீஸ்பூன்.
விழுதாக அரைக்க: துருவிய தேங்காய் 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 2, சோம்பு கால் டீஸ்பூன், பூண்டு 2 பல்.

தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், வெந்தயம் 15, பெருங்காயத்தூள் 1 சிட்டிகை, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு + வெங்காயத்தின் தோலை உரித்தெடுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அத்துடன் சாம்பார் பொடியை கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பவற்றை தாளித்து பூண்டு + வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி + உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கரைத்த புளி + சாம்பார்பொடி கலந்த நீரை அதில் ஊற்றி நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

சேனைக்கிழங்கு சிப்ஸ்

தேவையானவை: சேனைக்கிழங்கு (நறுக்கியது) 1 கப், உப்பு தேவைக்கேற்ப, மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை கப், கறிவேப்பிலை 2 ஆர்க்கு.

செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு சதுர, மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பின்னர் தண்ணீரில் நன்கு அலசி நீரை வடிய விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வில்லைகளை மொறுமொறுவென வேகவைத்து எடுத்து, சிறிது ஆறியதும் தூள் உப்பு + மிளகாய்தூள் சேர்த்து பிசறவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து அதன் மேல் தூவி பரிமாறவும்.

சேனைக்கிழங்கு கூட்டு

தேவையானவை: துவரம்பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, நறுக்கிய சேனைக்கிழங்கு 1 கப், சின்ன வெங்காயம் 6, பச்சை மிளகாய் 2, சாம்பார்பொடி ஒன்றேகால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்தமிளகாய் 1, எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை தண்ணீர் + மஞ்சள்தூள் சேர்த்து அரைப்பதமாக வேகவைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை தோல் நீக்கி பட்டாணி அளவு பொடித்துண்டுகளாக நறுக்கி அலசிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும். கிழங்குத் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி ஆகியவற்றை பருப்புடன் சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து, சார்ந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்து கலக்கி கொதித்ததும் இறக்கவும். இது சாதத்துடனும், சப்பாத்தியுடனும் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, சிறிய கேரட் 1, பீன்ஸ் 1, பச்சை பட்டாணி 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய குடமிளகாய் 2 டீஸ்பூன், கடலை மாவு 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு 2 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 2 கப்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது). கேரட்டை தோல் நீக்கி துருவவும். பீன்ஸ், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு பட்டாணியுடன் சேர்த்து லேசாக வதக்கி, மசித்த கிழங்குடன் சேர்க்கவும். பச்சரிசி மாவு, கடலை மாவு, காய்கள், மசித்த கிழங்கு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, தட்டிய வடைகளை அதில் போட்டு வேகவைத்து, சிறிது சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

ஆலு மஞ்சூரியன்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, சோளமாவு அரை கப், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், பச்சரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, மிளகாய்தூள் 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன், கேசரி பவுடர் 1 சிட்டிகை, சோயா சாஸ் 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, நறுக்கிய மல்லித்தழை 2 டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, சுண்டு விரல் அளவு நீளம் + கனத்துக்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்கு அலசி எடுக்கவும். ஒரு அகலமான தட்டில் மைதா, சோளமாவு, பச்சரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பின் சிறிது தண்ணீர் தெளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளுடன் சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊறவிடவும். பின் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் பிசறிய உருளைக்கிழங்கு துண்டுகளை (பத்துப்பத்து துண்டுகளாக) போட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொள்ளவும்).
பின்னர் வாணலியில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சதுரங்களாக நறுக்கிய வெங்காயம் + சிறு வளையங்களாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதில் சோயா சாஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி, வறுத்து வைத்துள்ள கிழங்குத் துண்டுகளை அதில் கொட்டி மேலும் கிளறி இறக்கி மல்லித்தழை பொடியாக நறுக்கியதைத் தூவவும். அதன் மேல் நறுக்கிய சிறு எலுமிச்சை துண்டை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

லைம் பொட்டேடோ பொடிமாஸ்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, எலுமிச்சம்பழச் சாறு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு, பச்சை மிளகாய் 2, இஞ்சி சிறு துண்டு, தூள் உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். உதிர்த்த கிழங்குடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து பிசறவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் பிசறிய கிழங்கை சேர்த்து சூடு வரக் கிளறி, தேங்காய் துருவலையும் தூவி கிளறி இறக்கவும்.


மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்

தேவையானவை: பெரிய அளவில் மரவள்ளிக்கிழங்கு 1, மிளகாய்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 2 கப்.

செய்முறை: கிழங்கின் தோலை நீக்கவும். பின் அவற்றை மெல்லிய தகடுகளாக அரிவாள்மனையில் நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும். கிழங்கை 2 அல்லது 3 முறை அதிலிருக்கும் பால் போகுமாறு தண்ணீரில் அலசி எடுத்து நீர் வடிந்ததும் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு சிவந்து விடாமல் பார்த்து, மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்). சிறிது சூடு ஆறியதும் சிப்ஸின் மேல் மிளகாய்தூள் + உப்பு தூவி குலுக்கிவிடவும். இதை டப்பாக்களில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம்.

மரவள்ளிக்கிழங்கு உப்புமா

தேவையானவை: பெரிய மரவள்ளிக்கிழங்கு 1, இஞ்சித் துருவல் 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, தூள் உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் 2.

செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி, சதுரத் துண்டுகளாக நறுக்கி நன்கு தண்ணீரில் அலசி எடுத்து உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை நீக்கி துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதில் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு வேகவைத்த கிழங்கினையும் சேர்த்து கிழங்கு உடைந்து விடாமல் கிளறி தேங்காய் துருவல் தூவி கரண்டியின் காம்புப் பகுதி கொண்டு கிளறி இறக்கவும். இது கேரளாவில் மிகவும் பிரசித்தமான ஒரு சிற்றுண்டியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு இது நல்ல சத்தான உணவு.

பொட்டேடோ டொமேட்டோ கட்லட்

தேவையானவை: தக்காளி (பெரியது) 3, உருளைக்கிழங்கு 3, பெரிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை 3 டீஸ்பூன், மிளகாய்தூள் 2 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப.
வெளிமாவு தயாரிப்பதற்கு: மைதா மாவு முக்கால் கப், பச்சரிசி மாவு கால் கப், தூள் உப்பு தேவைக்கேற்ப, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் இரண்டரை கப்.

செய்முறை: தக்காளியைக் கழுவி காம்புப் பகுதியை மெல்லிய தகடாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் தக்காளியின் உள்பகுதியில் உள்ள விதை + நீரை ஸ்பூன் அல்லது கத்தி கொண்டு எடுத்து விடவும். கடலை மாவு + அரிசி மாவு + உப்பு + மிளகாய்தூள் + தண்ணீர் சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்து உப்பு + மிளகாய்தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் பிசைந்த கிழங்கையும் மல்லித்தழையையும் சேர்த்து சூடு வரக் கிளறி இறக்கி ஆற விடவும். பின்னர் உருளைக்கிழங்கு மசாலாவை தக்காளியில் நிரப்பவும். நறுக்கி எடுத்த காம்புப் பகுதியில், கரைத்த மாவை தொட்டுத் தடவி ஒட்டி மூடிவிடவும். பின் முழுத்தக்காளியையும் கரைத்த மாவில் அமிழ்த்தி எடுத்து, வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் பொரித்தெடுக்கவும். இந்த மூடிதக்காளி கட்லெட்டுக்கு தக்காளி சாஸ், சுவையான ஜோடி.

தில்குஷ் மிக்சர்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, சர்க்கரை கால் கப், முந்திரிப்பருப்பு 10, உலர் திராட்சை 10, வேர்க்கடலை 2 டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி கழுவிக் கொள்ளவும். பின் ஸ்கிராப்பரில் கிழங்கை பொடியாக துருவிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை 2 துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கவும். வாணலியில் எண்ணெயை சுடவைத்து, காய்ந்த திராட்சை, முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை அதில் சிவக்க வறுத்தெடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் துருவிய கிழங்கையும் சிறிது சிறிதாக வெள்ளை நிறமாக மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும். வறுத்தெடுத்த கிழங்கு ஆறியதும் சர்க்கரை, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, கடலை ஆகியவற்றை கலந்து குலுக்கி எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும். தில்குஷ் மிக்சர் ரெடி. குழந்தைகளின் மனதைக் கொள்ளைகொள்ளும் மாலை நேர ஸ்நாக்ஸ் இது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை: ரோஸ் நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு 3 (நடுத்தர சைஸ்), பொரி அரிசி மாவு 1 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, உப்பு 1 சிட்டிகை, சர்க்கரை 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: கிழங்கை மண் போகக் கழுவி, தோலுடன் சற்று கனமான வளையங்களாக நறுக்கி தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்து குழைந்து விடாமல் கவனமாக வேகவைத்தெடுத்து தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கிழங்கையும் சேர்த்து கிளறி சூடாகப் எடுத்து பரிமாறவும்.

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 10, பெரிய வெங்காயம் 2, மிளகாய்தூள் 3 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் இரண்டரை கப்.
வெளிமாவு தயாரிக்க: பச்சரிசி 1 கப், உளுத்தம் பருப்பு முக்கால் கப், உப்பு தேவைக் கேற்ப.

செய்முறை: பச்சரிசி + உளுத்தம்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு ஆட்டி உப்பு சேர்க்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து, நன்கு பிசைந்து அதில் மிளகாய்தூள், உப்பு கலந்து பிசையவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கி அதில் உருளை மசாலாவையும் சேர்த்து சூடு வரக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, உருட்டிய உருண்டை களை ஆட்டிவைத்துள்ள மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் சிவக்க பொரித் தெடுக்கவும். இது அருமையான மாலை நேரச் சிற்றுண்டி. தேங்காய் சட்னி இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், பச்சரிசி மாவு 4 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, வெறும் வாணலியில் பொரித்த வெள்ளை எள் அரை டீஸ்பூன், பாயச பவுடர் அரை சிட்டிகை, எண்ணெய் ஒன்றரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, கழுவி, பின் பெரிய கண் உடைய ஸ்கிராப்பரில் நீளவாட்டில் மெல்லிய தகடுகளாக சீவிக் கொள்ளவும். மிளகாய்தூள், உப்பு, பச்சரிசி மாவு, எள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சிறிது நீர் தெளித்து, உருளைக்கிழங்குடன் பிசறவும். பின்னர் வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் பிசறிய கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் உதிர்த்துவிட்டு ரோஸ்டாக பொரித் தெடுக்கவும். விருந்துகளில் பரிமாறினால், முதலிடம் பெறும் அயிட்டம் இது.

கருணைக்கிழங்கு குழம்பு

தேவையானவை: கருணைக்கிழங்கு 3, பூண்டு 10 பல், சின்ன வெங்காயம் 10, புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, துவரம்பருப்பு வேகவைத்த நீர் மட்டும் கால் கப்.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: கருணைக்கிழங்கை தோலுடன், நன்கு கழுவி, குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வைத்து வேகவைத்துக்கொண்டு நீரை வடித்து விட்டு தோலை உரித்தெடுக்கவும். அதை சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சாம்பார்பொடி + மஞ்சள்தூள் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதங்களை போட்டு தாளித்து, சிவந்ததும் பூண்டு + வெங்காயம் + கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய கிழங்கையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி, கரைத்த புளி + சாம்பார்பொடி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சாதத்தில் கொஞ்சமே போட்டுப் பிசறி சாப்பிட்டாலும், சுவையும் மணமும் சுண்டி இழுக்கும்.

சேனைக்கிழங்கு மசாலா

தேவையானவை: நறுக்கிய சேனைக்கிழங்கு 1 கப், தக்காளி 1, பூண்டு 6 பல், பெரிய வெங்காயம் 1.
விழுதாக அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் 8, சோம்பு கால் டீஸ்பூன், பூண்டு 1 பல், சீரகம் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்.
தாளிக்க: சோம்பு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பட்டை 1 சிறிய துண்டு, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சதுரங்களாக நறுக்கி மண் போக அலசி, உப்பு சேர்த்து வேகவைத்து, நீரை வடித்து விடவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கவும். அரைப்ப வற்றை அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை போட்டு தாளித்து பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்து சிறிது கிளறவும். பின்னர் வேக வைத்த கிழங்கு + சிறிது தூள் உப்பு சேர்த்து வதக்கி வெந்ததும் எடுத்து பரிமாறவும். (இது சற்று தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)

வள்ளிக்கிழங்கு கூட்டு

தேவையானவை: நடுத்தர அளவு வள்ளிக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, துருவிய தேங்காய் 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, சாம்பார்பொடி 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு: எண்ணெய் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு.

செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் + தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சதுரத் துண்டுகளாக (பட்டாணி அளவு) நறுக்கி அலசி எடுக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த பருப்புடன் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து காயை வேகவிடவும். கிழங்கு வெந்ததும் உப்பு சேர்த்து கலக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து அதில் ஊற்றி கலக்கி துருவிய தேங்காயையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

வள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை: நடுத்தர அளவில் வள்ளிக்கிழங்கு 3, மஞ்சள்தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப, துருவிய தேங்காய் 4 டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3லிருந்து 4, கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு.

செய்முறை: வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சற்று கனமான வளையத் துண்டுகளாக நறுக்கி தண்ணீர் + மஞ்சள்தூள் சேர்த்து வெந்ததும் உப்பு சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பவற்றை போட்டு தாளித்து அதில் வேகவைத்த கிழங்குத் துண்டுகளையும் சேர்த்து கிளறி, அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவி கிளறி சூடானதும் இறக்கவும்.



மினி ஆலு மசாலா

தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு 12, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, பட்டை சிறிது, ஏலக்காய் 1, கிராம்பு 1 (மூன்றும் சேர்ந்து பொடித்தது) கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, வேகவைத்த சின்ன உருளை 2, மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், புளி அரை நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் கால் டம்ளர், பொடித்த வெல்லம் 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி, சீரகம், மஞ்சள்தூள், வேகவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது), வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, தக்காளியையும் சேர்த்து உருத்தெரியாமல் வதக்கவும். பின் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி பிறகு புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த கிழங்கை அத்துடன் சேர்த்து கிளறி சற்று கெட்டியானதும் இறக்கி, பொடியாக அரிந்த வெங்காயம் + மல்லித்தழை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்டிஷ் ஆகும்.

உருளைக்கிழங்குதேங்காய்ப்பால் சொதி

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, முருங்கைக்காய் (சிறியதாக) 1, பச்சை மிளகாய் 7, வறுத்த பாசிப்பருப்பு கால் கப், தேங்காய் 1 மூடி, எலுமிச்சம்பழம் பாதி மூடி, மல்லித்தழை நறுக்கியது 3 டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு.

செய்முறை: தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பால் என வடிகட்டி எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளரை தனியாக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து மலர வேகவைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும், முருங்கைக்காயையும் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். சிறிது இஞ்சி, பச்சை மிளகாய் + சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். காயை மூன்றாம் பாலில் வேகவிடவும். காய் வெந்ததும் இரண்டாம் பால், வெந்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து வேகவிடவும்.
சற்று கெட்டியானதும் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும் முதல் பாலை விட்டு நுரை கூடியதும் (கொதிக்கக் கூடாது) இறக்கி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து கலக்கிவிடவும்.

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: பெரிய உருளைக் கிழங்கு 3.
அரைப்பதற்கு: மிளகாய்தூள் 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பூண்டு 1 பல், பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் கால் கப், கடுகு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: உருளையை தோலுடன் கழுவி, நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும். அதில் அரைத்தவற்றை பிசறவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளித்து அதில் பிசறிய துண்டுகளை போட்டு நன்கு சுருள வேகவைத்து எடுக்கவும் (இது பார்ப்பதற்கு ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்). அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்.

சிறுகிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சிறுகிழங்கு கால் கிலோ.
அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் 7 லிருந்து 8, சீரகம் அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் 2.
பிசறுவதற்கு: பச்சரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
பொரிக்க: எண்ணெய் ஒன்றரை கப்

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். சிறுகிழங்கை மண் போகக் கழுவி குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்து, தோலை உரித்து நான்காக நறுக்கவும். அரைத்த விழுதையும் அரிசி மாவு, உப்பையும் கிழங்கு துண்டுகளில் சேர்த்துப் பிசறவும். 10 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.



சேப்பங்கிழங்கு மசாலா

தேவையானவை: சேப்பங்கிழங்கு 15, பெரிய வெங்காயம் 1, பூண்டு 10 பல், மிளகாய்தூள் 2 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி வேகவைத்து தோலை நீக்கவும். பின் அதை சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாட்டில் மெல்லிய தகடுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்பவற்றைப் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த கிழங்குத் துண்டுகளையும் சேர்த்து நன்கு சுருள வேகவிட்டு எடுக்கவும்.

உருளைக்கிழங்கு கட்லட்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 3, பெரிய வெங்காயம் 1, நறுக்கிய மல்லித்தழை கால் கப், மிளகாய்தூள் 2 டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, மைதா மாவு 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை பொடித்தது அரை கப், எண்ணெய் 2 கப்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய்தூள், தூள்உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.
மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.


சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு

தேவையானவை: சேப்பங்கிழங்கு 5லிருந்து 6, சின்ன வெங்காயம் 10.
விழுதாக அரைப்பதற்கு: தேங்காய் 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் 7லிருந்து 8, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, ஊறவைத்த பச்சரிசி + கடலைப்பருப்பு தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க: எ ண்ணெய் 5 டீஸ்பூன், மிளகு 10, வெந்தயம் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு, கெட்டி மோர் ஒன்றரை கப் (தேவைப்பட்டால் மஞ்சள்தூள் 1 சிட்டிகை சேர்க்கலாம்)

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நீளவாட்டில் நறுக்கவும். அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி கிழங்கையும் சேர்த்து கிளறவும். கடைந்த கெட்டி மோரில் உப்பையும் அரைத்த விழுதையும் கலந்து, வதக்கியதில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து நுரை கூடி வரும்போது இறக்கி விடவும். (மோர் குழம்பை கொதிக்க விடக்கூடாது).

பொட்டேடோ சாப்ஸ்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2, துருவிய தேங்காய் அரை கப், மிளகாய் 10, பூண்டு 2 பல், பெரிய வெங்காயம் 2, சோம்பு கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். தேங்காய், பூண்டு, வெங்காயம், மிளகாய், சோம்பு, உப்பு இவற்றை விழுதாக அரைக்கவும். உருளையை அரைப்பதமாக உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின் அரைத்ததை கிழங்கின் இருபுறமும் நன்கு தடவவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடு செய்து அதில் 4 அல்லது 5 துண்டுகளாக பரப்பி அதைச் சுற்றி எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பிவிட்டு ரோஸ்டாக வேகவைத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாத் துண்டுகளையும் வேகவைத்து எடுக்கவும். சூடான சாப்ஸ் ரெடி.

கருணைக்கிழங்கு லைம் மசியல்

தேவையானவை: கருணைக்கிழங்கு 4 (நடுத்தர அளவு), பெரிய வெங்காயம் 1, எலுமிச்சம்பழம் பாதி மூடி, பச்சை மிளகாய் 4, மஞ்சள்தூள் 1 சிட்டிகை.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு சிறிது, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, எண்ணெய் கால் கப், காய்ந்த மிளகாய் 1.

செய்முறை: கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். எலுமிச்சம்பழத்துடன் மஞ்சள் தூள், 1 டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் மசித்த கிழங்கை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கரைத்த கிழங்கு மசாலாவை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். கிழங்கு வெந்து அடிப்பிடிக்காமல் சுருள வெந்ததும் இறக்கி பரிமாறவும். செட்டிநாட்டில் மிக பிரபலமான அயிட்டம் இது.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சேப்பங்கிழங்கு 15, மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் 2 கப், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன்.

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் தோலை நீக்கி, நீளவாட்டில் நான்காக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இந்தக் கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக சேர்த்து அரைவேக்காடாக பொரித்தெடுக்கவும். பின் எண்ணெயை வடித்துவிட்டு, வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிதங்களைப் போட்டு தாளித்து வறுத்த கிழங்கு, தூள் உப்பு, மிளகாய்தூள், கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.

This page is powered by Blogger. Isn't yours?