<$BlogRSDURL$>

Friday, March 03, 2006

வெந்தயக் குழம்பு 

தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் 4 டேபிள்ஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் _ 1 கப், பூண்டு _ 15 பல், வத்தக்குழம்பு பொடி _ 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு _ _ அரை டீஸ்பூன், கறிவேப்பிலை _ சிறிது, எண்ணெய் _ 6 டேபிள்ஸ்பூன், உப்பு _ தேவையானது, தேங்காய் துருவல் _ 2 டேபிள்ஸ்பூன், புளி _ பெரிய எலுமிச்சை அளவு.



செய்முறை:

வெந்தயத்தை ஊறவைத்து, நீரை வடித்து துணியில் கட்டிவைத்தால் மறுநாள் முளை விட்டிருக்கும். முளைகட்டிய வெந்தயத்தில் பாதியை, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகைப் போடவும். வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த வெங்காயம், பூண்டு, மீதி உள்ள முளைவிட்ட வெந்தயம் என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். கடைசியில், வத்தல் குழம்புப் பொடியை போட்டுக் கிளறவும். அடுத்து ஊற வைத்த புளியை கரைத்து விட்டு, உப்பைப் போட்டு கொதிக்க விடவும். பாதி கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெய் லேசாக பிரிந்து நிற்பதுதான் நன்றாகக் கொதி வந்ததற்கு அடையாளம். இந்தக் குழம்பை சூடான சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நார்ச்சத்து மிக்க இந்தக் குழம்பு, இரண்டு நாள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வத்தல் குழம்புப் பொடி செய்வது எப்படி..??

‘‘காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் 2 கப், தனியா 4 கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், மிளகு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் (விருப்பப்பட்டால்) 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், விரலி மஞ்சள் 2. இவை எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் வத்தக் குழம்பு பொடி. வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்பு போன்றவற்றை வைக்கும்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிதங்களைப் போட்டு, இந்த வத்தக் குழம்புப் பொடியில் 2 டீஸ்பூன் போட்டு, லேசாக வறுத்த பிறகு புளிக்கரைசலை சேருங்கள். குழம்பின் மணம் வீட்டைத் தூக்கும்.’’

This page is powered by Blogger. Isn't yours?