Monday, March 13, 2006
உப்பு - வெல்ல - அடைகள்
உப்பு அடை :
தேவையானவை:
பச்சரிசி ஒரு கப், வெள்ளை காராமணி 1 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் சிறிது, பாசிப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, உப்பு
தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியை சன்ன ரவையாக உடைக்கவும். காராமணியை லேசாக வறுத்து, ஊற வைக்கவும். குறைந்தது 4 மணி நேரமாவது ஊறிய பிறகு, குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் 2 கப் (ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்) தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு போடவும். அத்துடன் வெந்த காராமணியையும் சேர்க்கவும்.
தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். நன்கு கெட்டி ஆனதும் இறக்கவும். (கவனிக்கவும்: உப்புமா போல ரவை முழுவதுமாக வெந்துவிடக்கூடாது). ஆறிய பிறகு, இந்த மாவை கையால் மெல்லிய அடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும்.
அரிசியை நன்கு சிவக்க வறுத்து, ரவையாக உடைத்து செய்தால் அடைகள் நன்கு வாசமுடன் இருக்கும். காராமணி கொஞ்சமாகப் போட்டால் போதும். பாசிப்பருப்பு போடாமலும் இதை செய்யலாம்.
வெல்ல அடை :
தேவையானவை:
பச்சரிசி ரவை 1 கப், பொடி செய்த வெல்லம் ஒன்றரை கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வாணலியில் 2 கப் தண்ணீர் வைத்து, ஏலக்காய்தூள், வெந்த காராமணி சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைப் போட்டுக் கிளறவும். ரவை நன்கு வேகவேண்டும். பிறகு, வெல்லத்தூளில் கால் கப் தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும். கொஞ்சம் கெட்டிப் பாகாக வந்ததும், அதை வெந்த ரவையில் சேர்த்துக் கிளறவும். ஆறியபிறகு, அடைகளாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைக்கவும். இரண்டு அடைகளையும் செய்து வரப் போகும் நோன்புக்கு அசத்துங்கள்.
ரவை வெந்தபிறகுதான், வெல்லப்பாகை ஊற்றிக் கிளறவேண்டும். வெல்லப்பாகு ஊற்றிவிட்டால், பிறகு ரவை வேகவே வேகாது. இனிப்பு தூக்கலாக விரும்புபவர்கள், இன்னும் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.