<$BlogRSDURL$>

Saturday, January 14, 2006

அவள் விகடன் - ஜனவரி 14 


ரவா சர்க்கரை பொங்கல்



தேவையானவை:

ரவை - 1 கப், நெய் 1 கப், வெல்லம் - இரண்டரை கப், ஏலக்காய் 5, தண்ணீர் - 3 கப், முந்திரிப்பருப்பு - கால் கப். ,

செய்முறை:

அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி, முதலில் முந்திரிப்பருப்பை வறுத் தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ரவையைப் போட்டு, சிவக்க வறுக்கவும். 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையில் ஊற்றி கிளறவும்.
இப்போது வெல்லத்தை தூளாக்கி, சிறிது தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி, கெட்டியான பாகாகக் காய்ச்சவும். இதை ரவையில் விட்டு, நன்றாகக் கிளறி, இதனுடன் ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி போட்டு கிளறி இறக்கவும். இது ஒரு வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல்.சுவை தூக்கலாக வேண்டும் என்பவர்கள், இதில் சிறிது மில்க் மெய்டையும் கலந்து கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொடித்தூவல்



தேவையானவை:

தோல் சீவி சற்று பெரியதாக அரிந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு 2 கப், தாளிக்க எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயப் பொடி தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.

பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 5. எல்லாப் பொருட்களையும் சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து, சற்று கரகரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து, பின் வேக வைத்த கிழங்கை போடவும். சற்று வதங்கியதும் பொடியை தூவி, இறக்கவும். உங்கள் வீட்டின் பொங்கல் விருந்தில் முதலிடம் பிடிக்கும் இந்த பொடிதூவல்! சாதாரணமாக பொரியல் செய்து சாப்பிடுவதைவிட, இது போல் பொடி தூவி செய்யும் பொரியல், இனிப்பு கலந்த காரச் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.


கசகசா ஆல்மண்ட் பூரி



தேவையானவை:

கசகசா 2 கப், பாதாம்பருப்பு அரை கப், பச்சரிசி மாவு 1 கப், சீனி 4 கப், குங்குமப்பூ அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 25 கிராம், கிஸ்மிஸ் சிறிது, கோதுமை மாவு 4 கப், நெய் (நல்ல நெய்) 4 கப், பால் சிறிதளவு.

செய்முறை:

கசகசாவை ஊற வைக்கவும். பாதாம்பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு தோலை நீக்கவும். கசகசாவையும் பாதாம்பருப்பையும் கல் உரல் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் கசகசா, பாதாம்பருப்பு அரைத்த விழுதையும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் சிறு துண்டுகளாக்கவும். அத்துடன் குங்குமப் பூவையும் சேர்த்து அரைத்து, கிளறிய விழுதுடன் கலக்கவும். இதுதான் பூரணம்.
கோதுமை மாவை தண்ணீர் விட்டு, பாலும் சேர்த்து நன்றாக மெதுவாக வரும் வரை பிசையவும். நன்றாக அடித்துப் பிசைந்த கோதுமை மாவை அப்பளம் போட்டு, சிறிது நெய், அரிசி மாவு கலந்து, தடவி, சுருட்டி, துண்டுகளாக நறுக்கி, அப்பளம் போல் போடவும்.

அப்பளத்தின் மேல் கசகசா பூரணத்தைப் பரப்பி, மேலே மற்றொரு அப்பளத்தை வைத்து நன்றாகச் சேர்த்து சோமாசிக் கரண்டியால் ஓரங்களை நறுக்கவும். பின் தேவையான அளவு நெய்யை காயவைத்து பொரித்தெடுக்கவும். சுவை நிறைந்த பூரி ரெடி.
கசகசா பிடிக்காதவர்கள், வெறும் பாதாம், முந்திரியை மட்டும் வைத்து செய்யலாம். நெய் பிடிக்காதவர்கள், எண்ணெயில் பூரிகளைப் பொரிக்கலாம்

This page is powered by Blogger. Isn't yours?