<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் 

ஆந்திரா என்றாலே ஊறுகாய் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆவக்காய் தயாரிப்பில் பல வகை செய்முறைகள் பயன்படுத்தப்பட்டாலும், இந்த செய்முறை ஆந்திராவிலேயே செய்யும் முறை.

தேவையானவை:

நல்ல முற்றின மாங்காய் (புளிப்பும் நாரும் உள்ள மாங்காய்) 6, நல்ல சிகப்பு நிறமுடைய மிளகாய்தூள் முக்கால் கப், கடுகுத்தூள் முக்கால் கப், உப்பு தூள் முக்கால் கப், நல்லெண்ணெய் ஒன்றரை கப், வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன், உரித்த பூண்டு 10 பல்.

செய்முறை:

மாங்காய்களை கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். நடுவில் இருக்கும் கொட்டையுடன் சேர்த்து, சற்று நடுத்தரமான துண்டுகளாக நறுக்குங்கள். மாங்கொட்டைக்குள் இருக்கும் மெல்லிய சருகு போன்ற தோலையும் பருப்பையும் நீக்குங்கள். மிளகாய்தூள், கடுகுத் தூள், உப்புத்தூள் ஆகியவற்றுடன் வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதனுடன் எண்ணெயையும் சேர்த்து, நன்கு குழைத்துக்கொள்ளுங்கள். நறுக்கிய மாங்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து, நன்கு பிசறி ஒரு ஈரமில்லாத ஜாடியில் அல்லது பாட்டிலில் போடுங்கள். ஜாடியின் வாய், விளிம்பு ஆகியவற்றை நன்கு துடைத்து, மூடிவையுங்கள்.



மூன்றாவது நாள் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, நன்கு கலந்துகொண்டு மீண்டும் ஜாடியில் அல்லது பாட்டிலில் எடுத்து சுத்தமாக துடைத்து வையுங்கள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, எண்ணெய் மேலே மிதந்து வரும். ஊற்றிய எண்ணெய் போதவில்லை எனில் மீண்டும் சிறிது ஊற்றிக்கொள்ளலாம்.
மாங்காய் துண்டுகள் நன்கு ஊறியபின், எடுத்து உபயோகிக்கலாம். ஊறுகாயை எடுக்கும்போது, மேலே நிற்கும் எண்ணெயை ஒதுக்கிவிட்டு, துண்டுகளை மட்டும் எடுக்கவேண்டும். அப்போதுதான், ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு வறண்டு போகாமல் இருக்கும். ஈரமான கையோ, கரண்டியோ போடக்கூடாது.
சூடாக இருக்கும் சாதத்தில், நல்லெண்ணெய் ஊற்றி, இந்த ஊறுகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் தெரியும் இதன் அபார சுவை!

This page is powered by Blogger. Isn't yours?