<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

இரவில் உண்ணக் கூடாதவை 

‘‘உணவு சாப்பிடுவதற்கான கட்டுப்பாடுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று, உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆயுர்வேத கோணம். இன்னொன்று, நம் கலாசாரம் சார்ந்தது.

வயிற்றில் இருக்கும் உணவுப் பொருட்களை ஜீரணிக்க ‘ஜாடராக்கினி’ என்று சொல்லப்படும் உஷ்ணம் இருக்கிறது. சூரியனின் கதிர்கள் இந்த ஜாடராக்கினிக்கு உதவி செய்யும். சூரியன் அஸ்தமித்த பிறகு இந்த ஜாடராக்கினி பலவீனமாகிவிடுகிறது என்பதால், அந்த நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவைத்தான் சாப்பிட வேண்டும். ‘இரவில் படுத்துவிடுகிறோம்; கர்மேந்திரியங் களுக்கோ, ஞானேந்திரியங்களுக்கோ வேலை இல்லை’ என்பதாலும், எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.

கட்டித் தயிர், எளிதில் ஜீரணம் ஆகாதது. இரவில் அதை சாப்பிட்டால், ஜீரணம் ஆகாமல் கபத்தைப் பெருக்கி, நோய் வரச் செய்யும். ‘ஏற்கெனவே வியாதி இருப்பவர்களுக்கு அது இரட்டிப்பாகும்; வியாதி இல்லாதவர்களுக்கு வியாதி வரும்’ என்கிறது ஆயுர்வேதம்.

தர்ம சாஸ்திரமோ ‘இரவில் தயிர் சாப்பிட்டால் லட்சுமிகரம் இருக்காது... செல்வம் போய்விடும்’ என்கிறது. தயிர் தரும் மந்தத்தனத்தால் சிந்திக்கும் திறன் குறைந்து, செயல்பாட்டில் குறை ஏற்பட்டு, நாளடைவில் எதற்கும் லாயக்கில்லாமல் போனால் லட்சுமி போகத் தானே செய்வாள்? காலை வேளையில் பழைய சாதம், கட்டித் தயிர், வடுமாங்காய் கொடுத்து வயிறு நிறைய சாப்பிடச் சொல்லுங்கள். பத்து நிமிடத்தில் ‘கொஞ்சம் தூங்கிவிட்டு வேலை செய்கிறேனே...’ என்று கண் செருகுவார். சோம்பேறித்தனம் வருகிறதல்லவா? இந்த சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும் தயிரை தினப்படி இரவு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். இரவில் தயிர் சாப்பிட்டால் அதற்கு முன்பு சாப்பிட்ட அனைத்தும் ஜீரணம் ஆக காலதாமதம் ஆகும். ஊளைச் சதைதான் வளரும்.

உணவுக் கலவையும் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம். இரவில் பால் சாதம் சாப்பிட்டுவிட்டு தயிரைக் குடிக்கக் கூடாது. மோர் சாதம் சாப்பிட்டுவிட்டு பாலைக் குடிக்கக் கூடாது. காரணம், பால் என்பது நேரடியாக மடுவில் இருந்து வந்து வெறுமனே சூடுபடுத்தப்பட்டு இயல்பு மாறாமல் இருப்பது. தயிரோ ஒரு நாள் வைக்கப்பட்டு புளிப்பு ஏறி திடத்தன்மை அதிகரித்து இருப்பது. இரண்டும் சேரக்கூடாது. சேர்ந்தால் பசி, ஜீரணம் ஆகியவற்றில் குறைபாட்டை உண்டாக்கும்.
முன்பெல்லாம் இரவில் கீரை வாங்கப் போனால் கிடைக்காது. ஏனெனில், கீரை வகைகளை இரவில் உண்ணக் கூடாது. அது எளிதில் ஜீரணமாகாதது. கீரை மட்டுமல்ல, இலையும் தண்டுமாக இருக்கிற எந்த வகை யையும் இரவு சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

இரவு உணவை பாலில்தான் முடிக்க வேண்டும். பாலுக்குப் பிறகு எதையும் (வாழைப்பழம் உட்பட) சாப்பிடக்கூடாது. இனிப்போ காரமோ தனித்து உண்ணாமல், துவர்ப்பு சுவையில்தான் இரவு உணவு முடியவேண்டும்.
பகல் உணவில் திடம் அதிகமாகவும் திரவம் குறைவாக வும் இருக்கவேண்டும். இரவு உணவில் திடம் குறைந்தும் திரவம் அதிகமாகவும் இருக்கவேண்டும். கிழங்கு போன்ற கனமான பொருட்களை இரவில் தனித்துப் பயன்படுத்தக் கூடாது. அதை ஜீரணிக்க உதவும் பொருட்களோடு சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் சீக்கிரமே ஜீரணம் ஆவது போல பக்குவமான பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை, 9 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது மிகவும் நல்லது.



தயிர் சாதத்துடன் பச்சடி, அப்பளத்துடன் புளி இஞ்சி போன்ற கூட்டணியெல்லாம் இரவு நேரத்தில் கூடாது. கடைந்த மோர்தான் நல்லது. அதிலும், ஒரு பங்கு தயிர் என்றால் மூன்று பங்கு தண்ணீர் இருக்கவேண்டும்.
இரவில் சாப்பிடக்கூடாத இன்னொரு விஷயம், நெல்லிக்காய். பச்சைக் காய்கறிகளையும் இரவில் உணவில் சேர்க்கக்கூடாது. வேகவைத்த காய்கறிகள்தான் சிறந்தவை. பச்சைக் காய் கறிகளில் செய்த ஒரு பதார்த்தத்தையும் வேக வைத்த ஒன்றையும் சேர்த்து இரவில் உண்ணக் கூடாது.
காலையில் சமைத்த உணவை, ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதுதான். அப்போதே சமைத்த உணவாக இருப்பது நலம்.

சிலவேளைகளில் தொடர்ந்த பழக்கத்தால், சிலரின் உடல் சில உணவுகளை ஏற்றுக்கொண்டு விடுகிறது. அது அவர்களுக்கு எந்த கெடுதலும் செய்வதில்லை. சிறு வயதிலிருந்தே பழகி, உடல் அதை ஏற்றுக் கொண்டுவிட்டால், அது போன்ற உணவுகளை சாப்பிடலாம், தப்பில்லை!

உணவு குறித்த பொதுவான சில தகவல்கள்..

எதை எல்லாம் நெருப்பு கொண்டு சமைக்கிறோமோ அதை எல்லாம் சூடாகச் சாப்பிட வேண்டும். சில பொருட்களை சூடாக்கவே கூடாது.

உணவில் நெய்யின் மெழுகுத்தன்மை கலந்திருக்க வேண்டும். அல்லது காய்கறிகளின் மெழுகுத்தன்மை யாவது இருக்கவேண்டும். அளவோடு சாப்பிட வேண்டும்!

‘பகலில் முக்கால் வயிறும் இரவில் அரை வயிறும் சாப்பிடு’ என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை!’’

நன்றி : அவள் விகடன்

This page is powered by Blogger. Isn't yours?