<$BlogRSDURL$>

Monday, April 10, 2006

வேப்பம்பூ பச்சடி 

தேவை:

பச்சை (புதிய) வேப்பம்பூ 1 கப், வெல்லத்தூள் 1 கப், புளி கரைத்த தண்ணீர் 1 கப், உப்பு சிறிதளவு, காய்ந்த மிளகாய் 3, கடுகு கால் டீஸ்பூன், நெய் அரை டீஸ்பூன்.

செய்முறை:

புளி கரைத்த தண்ணீரை உப்பு போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, பின் வெல்லம் போட்டுக் கொதிக்க விட வும். சற்று பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். இப்போது பச்சடியில் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்த்தாயிற்று.
கைப்பு (கசப்பு), துவர்ப்பு இரு சுவையும் உடைய வேப்பம்பூவை புதிதாக பறித்து வந்து, வாணலியில் போட்டு அடுப்பை நிழல் போல் எரியவிட்டு, மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுக்கவும். அவசரப்படாமல், நிதானமாக வறுக்கவும். பிறகு, அதை மிக்ஸியில் பொடிக்கவும். அப்பளக் கல்லில் வைத்து குழவியால் கூட பொடிக்கலாம். பொடித்த பூவை பச்சடியில் தூவவும். உடனே பரிமாறவும். அறுசுவை ருசியோடு வேப்பம்பூ பொடியும் மொறுமொறுப்பாக வாயில் அகப்படும். தமிழ் வருடப் பிறப்பன்று அறுசுவையோடு சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்த பச்சடியை செய்வார்கள். உடம்புக்கும் மிக மிக நல்லது.
பூவைப் பச்சையாகப் போட்டால் அதன் சத்து அப்படியே கிடைக்கும். பச்சைப் பூ கிடைக்காவிட்டால், காய்ந்த வேப்பம்பூவை வறுத்துப் போடலாம். பூவை நன்கு கருக வறுக்காவிட்டால், பச்சடி கசந்துவிடும்.

This page is powered by Blogger. Isn't yours?