Wednesday, April 19, 2006
சில்லி பனீர்
தேவையானவை:
பனீர் (or Tofu or bean curd) 200 கிராம், கார்ன் மாவு 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 2, பூண்டு 4 பற்கள், பச்சை மிளகாய் 3, குட மிளகாய் 2, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, மிளகுத்தூள் அரை டீஸ்பூன், சோயா சாஸ் 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள்ஸ்பூன், அஜினோமோட்டா சிறிதளவு, சில்லி சாஸ் 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பனீரை டைமண்ட் வடிவமாக வெட்டி சிறிதளவு கார்ன் மாவில் பிசறி வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் பனீரை பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும். மீதி உள்ள கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை நான்காக வெட்டி தனித்தனியே உதிர்த்து வைக்கவும். குட மிளகாயையும், இதே அளவில் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். பூண்டு பற்களை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் 2 ஸ்பூன் சூடானவுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சாஸ்வகைகள், அஜினோமோட்டோ கலந்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கார்ன் மாவு தண்ணீரை கலந்து பனீர், காய்கறிகள் சேர்ந்தாற்போல் கெட்டியாக ஆனவுடன் இறக்கவும். இதற்கு ஆலிவ் எண்ணெய் உபயோகித்தால் நன்றாக இருக்கும்.