<$BlogRSDURL$>

Friday, May 12, 2006

உணவு போல் மனசு 


‘‘பச்சை மிளகாயைக் கடிச்சிட்டியா? இப்படி ‘சுள்’னு எரிஞ்சி விழறியே!’’ என்பது நாம் சாதாரணமாகப் பேசும் உரையாடல்தான். மிளகாயைக் கடித்தால், பேச்சு ‘சுள்’ளென்று வருமா என்பது எந்த அளவுக்கு உண்மையோ... தெரியவில்லை! ஆனால், நம் குணத்தையும் எண்ண ஓட்டத்தையும் மாற்றுகிற சக்தி உணவுக்கு உண்டு’’ என்கிறார், ஊட்டச் சத்து நிபுணரான ஷைனி சந்திரன்.

ஷைனி சொல்லும் உணவு மந்திரங்கள் சில இங்கே...

‘‘மூளையில் செரடோனின், டோபமின், நார்எபிநெஃப்ரைன் என்கிற மூன்று ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்’ இருக்கின்றன. இவைதான் தகவல்களை உருவாக்குவது, முக்கியமான தகவல்களை அனுப்புவது, அவற்றைப் பாதுகாப்பது... என்கிற மூன்று முக்கியமான வேலைகளையும் செய்கின்றன.எனவேதான் இவற்றுக்கு மூளையின் ‘ரசாயன தூதுவர்கள்’ (கெமிக்கல் மெசெஞ்சர்ஸ்) என்று பெயர். இந்த மூன்றும், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றன.
செரடோனின், நம்மை அமைதியாக, ரிலாக்ஸ்டாக வைத்திருக்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மற்ற இரண்டும் நம்மை உஷாராகவும் கவனத்துடனும் சக்தியுடனும் வைத்திருப்பதுடன், எந்த வேலை யையும் செய்வதற்குத் தூண்டு கோலாகவும் இருக்கின்றன.

இந்த நியூரோ டிரான்ஸ் மிட்டர்களைத் தூண்டும் ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என்று பார்ப்போம்.

செரடோனின், ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ நிறைந்த உணவுகளில் இருக்கிறது. அதாவது, கைக்குத்தல் அரிசி, சிவப்பு அவல், கேழ்வரகு, கம்பு, சோளம், முழு கோதுமை மாவு, பருப்புகள், ராஜ்மா, பச்சைப் பயறு, பட்டாணி, உருளைக்கிழங்கு, கோதுமை பிரெட் ஆகிய தானியங்கள் ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ அடங்கியவை. ரிலாக்ஸ்டாக இருக்க விரும்புகிறவர்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் நிரம்பிய உணவுகளை சேர்க்கும்போது மற்ற இரு டிரான்ஸ்மிட்டர்களான டோபமினும், நார்எபிநெஃப்ரைனும் தூண்டப்படுகின்றன. பாதாம், முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், மீன், முட்டை, முளை கட்டிய பயறுகள், பருப்புகள் ஆகியவை புரோட்டீன் உணவுகள். கால் சென்டர்கள் மற்றும் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவை இரவில் உட்கொண்டால், சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியும் (இரவில் நன்கு தூங்க விரும்பினால், புரோட்டீன் அடங்கிய உணவு களைத் தவிர்த்து, காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட் நிரம்பிய உணவை சாப்பிட வேண்டும்).
இவை தவிர, மற்ற உணவுப் பொருட்களும் மூளையுடன் தொடர்புடையவைதான். ஃப்ரெஷ் ஷான பழங்களிலும் காய்கறிகளிலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் எஸன்ஷியல் ஃபேட்டும்தான் மூளையின் செல்களை பாதுகாக்கின்றன. ‘நல்ல கொழுப்பு’ சத்து நிறைந்த நெய்மீன், கானாங்கெழுத்தி போன்ற மீன் உணவிலும், பாதாம், வால்நட், பரங்கி விதை, எள், வெந்தயம் போன்றவற்றிலும் இந்த எஸன்ஷியல் ஃபேட் அபரிமிதமாக உள்ளது.

மூளையின் நலத்துக்கு இன்னொரு முக்கியமான தேவை தண்ணீர். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும். ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம்பழச் சாறு, சர்க்கரை சேர்க் காத பழச்சாறுகள், காய்கறிச்சாறுகள், இளநீர், சூப், மோர், மூலிகை டீ, பச்சைத் தேயிலை டீ (பசுமையான தேயிலை இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ) போன்றவையும் உடலுக்கு புத்துணர்ச்சி தரக் கூடியவை. கோடைகாலத்தில் பானகம் அருந்தலாம்.

நிம்மதியையும் சுறுசுறுப்பையும் மட்டுமல்ல... எரிச்சலைக் கொடுக்கும் உணவு வகைகளும் உண்டு. கோலா பானங்கள், அடர் நிற சாக்லெட்டுகள், சத்து பானங்கள், காபி, டீ போன்றவற்றில் இருக்கும் காஃபைன் என்கிற பொருள், உடலில் இருக்கும் வைட்டமின் பி, சி, பொட்டாஷியம், கால்ஷியம், ஸின்க் போன்ற சத்துக்களை செயல் இழக்கச் செய்து விடும். இதனால், மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு, எரிச்சலும் பதற்றமும் ஏற் படுகிறது. எனவே, இந்த வகை பானங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரவில் இவற்றை அருந்தவே கூடாது.
மிட்டாய்கள், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், ஜாம், ஜெல்லிகள், இனிப்புகள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாகக் கூட்டி, பிறகு குறைக்கக் கூடியவை. எனவேதான் இவற்றை எடுத்துக் கொண்டதும் உற்சாகமாக இருப்பது போல தோன்றும். சிறிது நேரத்தில், சக்தி அனைத்தும் வடிந்து விட்டதைப் போன்ற களைப்பு ஏற்படுகிறது.

குறைந்த ஊட்டச் சத்துடன் கூடிய உணவு, மன அழுத்தம், சுற்றுப்புற சீர்கேடுகள், அதிக வேலைப் பளு, போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், எக்கச்சக்கமாக நொறுக்குத் தீனி போன்றவையும்கூட மூளையின் செயல்பாடுகளை பாதித்து, உடலைச் சோர்வடையச் செய்யும்.

சரியான இடைவெளியில் சாப்பிடும் பழக்கம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவும். பசியுடன் இருக்கையில் சர்க்கரையின் அளவில் மாறுபாடுகள் ஏற் படுவதால், மனநிலை மாறுகிறது. தேவை இல்லாத எரிச்சல், பதற்றம், கவலை, பயம், மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த மாதிரி நேரங்களில் உடனடியாக பழங் களையோ, காய்கறிகளையோ சாப் பிட்டால், வயிறோடு சேர்ந்து மனமும் குளிர்வதை உணர முடியும்’’ என்கிறார் ஷைனி.

This page is powered by Blogger. Isn't yours?