<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

எரிசேரி/ கப்பக் கஞ்சி / சக்கப் பிரதமன் 

எரிசேரி

தேவையானவை:

முழு பாசிப்பயறு (அல்லது) காராமணி அரை கப், பூசணிக்காய் amp; ஒரு கீற்று, வாழைக்காய் 1 (அல்லது) சேனைக்கிழங்கு ஒரு துண்டு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு. அரைக்க: தேங்காய் ஒரு மூடி, சீரகம் ஒரு டீஸ்பூன், பூண்டு (விருப்பப்பட்டால்) 2 பல், காய்ந்த மிளகாய் 6லிருந்து 8. தாளிக்க: தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பூசணிக்காய், வாழைக்காய் இரண்டையும் தோல் சீவி, சிறு துண்டுகளாக்குங்கள். பாசிப்பயறை வேகவிடுங்கள். பாதியளவு வேகும்போது, நறுக்கிய காய்களை அதனுடன் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவிடுங்கள். காய்கறிகள் வெந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துச் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதிக்கும் எரிசேரி. இப்போது, தேங்காய் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய் துருவலை போட்டு, அது பொன்னிறமாகச் சிவந்ததும் கொதிக்கும் எரிசேரியில் கொட்டுங்கள். கேரளத்தின் பாரம்பரியக் கூட்டு வகை இது. குறிப்பு: காராமணி சேர்ப்பதானால், வறுத்து, வேகவைத்து, பிறகு காய்களை சேருங்கள்.

சக்கப் பிரதமன்

தேவையானவை:

பலாச்சுளைகள் 10, வெல்லம் (பொடித்தது) ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால் ஒரு கப், ஏலக்காய் தூள் சிட்டிகை, நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பலாச்சுளைகளை விதை நீக்கிப் பொடியாக நறுக்குங்கள். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து, நறுக்கிய பலாச்சுளைகளை வதக்குங்கள். பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். அரைத்த பலாச்சுளை விழுதுடன், வெல்லப்பாகை சேர்த்து, குறைந்த தீயில், விடாமல் கிளறுங்கள். கடைசியில் தேங்காய்ப்பாலை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். மீதியிருக்கும் நெய்யையும் சேருங்கள். பலாச்சுளை மணமும் தேங்காய்ப்பால் சேர்ந்த சுவையும் உங்கள் மனசையும் நாவையும் கட்டிப் போடும். கேரளத்தின் தலையாய இனிப்பு இது.

கப்பக் கஞ்சி

தேவையானவை:

சிகப்பரிசி (புட்டரிசி) அரை கப், பரங்கிக்காய் சிறு துண்டு, வாழைக்காய் பாதி, தேங்காய்ப்பால் ஒரு கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

காய்களை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரிசியை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெந்த பிறகு, கரண்டியால் மசித்து விடுங்கள். அதனுடன், கொதிக்கும் நீர் 3 கப் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும் சேருங்கள். காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேங்காய்ப் பாலையும் ஊற்றுங்கள். கொதித்ததும் இறக்குங்கள். மணக்கும் கஞ்சி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள, மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து விரல்நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். அல்லது, காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தும் தொட்டுக் கொள்ளலாம்.

This page is powered by Blogger. Isn't yours?