<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

அசைவம் - ஈரல் பிரியாணி 

ஈரல் பிரியாணி

தேவையானவை:

ஈரல் 200 கிராம், பிரியாணி அரிசி amp; ஒரு கப், தக்காளி 3, பெரிய வெங்காயம் 2, மிளகு ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 7 பல், பட்டை 1, ஏலக்காய் 3, லவங்கம் 1, மிளகாய்தூள் கால் டீஸ்பூன், தனியாதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு அரை டீஸ்பூன், மல்லித்தழை ஒரு கைப்பிடி, புதினா 10 இலை, கறிவேப்பிலை 5 இலை, எண்ணெய் கால் கப், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஈரலை நன்கு கழுவி, பொடியாக நறுக்குங்கள். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மிளகு முதல் உப்பு வரை சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த மசாலாவைப் போட்டு, ஈரலையும் சேர்த்து, சுருளச் சுருள வதக்குங்கள். (கவனிக்கவும்: தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). வதங்கும்போதே புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் கக்கும் வரை வதக்குங்கள். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்துவிடுங்கள். இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, உப்புப் போட்டு, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து அரைவேக்காடாக வடித்துக்கொள்ளுங்கள். வடித்த சாதத்தை, வதங்கிக்கொண்டிருக்கும் ஈரல் தொக்கில் சேர்த்துக் கிளறி, ‘தம்’ போடுங்கள். 5 நிமிடம் கழித்து, இறக்கி சுடச்சுடப் பரிமாறுங்கள். காரசாரமான பிரியாணி இது.

முந்திரிப்பால் கைமா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், மட்டன் கைமா (கொத்துக்கறி) 150 கிராம், முந்திரி 50 கிராம், திராட்சை 10, நெய் கால் கப், எண்ணெய் 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம் தலா 1, ஏலக்காய் 3, பெரிய வெங்காயம் 1, தயிர் கால் கப், பச்சை மிளகாய் 5, புதினா ஒரு கைப்பிடி, உப்பு அரை டீஸ்பூன்.

செய்முறை:

பிரியாணி அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். கைமாவைக் கழுவி எடுத்துவையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்குங்கள். முந்திரியை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, ஊறியதும், மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரையுங்கள். அரைத்ததை தேங்காய்ப்பால் போல கெட்டியாக வடிகட்டி, திப்பி இல்லாமல் ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் நைஸாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு, பொன் வறுவலாக வதக்குங்கள். நன்கு வதங்கியதும், பட்டை, லவங்கத் தூள் போட்டுப் பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், தயிர், உப்பு சேர்த்து, அத்துடன் கைமாவையும் போட்டு வதக்குங்கள். வெந்தபிறகு, வடிகட்டி வைத்திருக்கும் முந்திரிப்பாலைத் தூக்கி ஊற்றி, அது கொதிக்கும்போது அரிசியைப் போட்டு, அது வெந்து, தண்ணீர் வற்றி ‘தளதள’வென வரும்போது தீயைக் குறைத்து, நெய்யில் வறுத்த திராட்சையைச் சேர்த்து 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். ‘பொலபொல’வென வந்ததும் இறக்குங்கள். இந்த பிரியாணி, முந்திரியின் சுவையும் மணமும் சேர்ந்து, படு ‘ரிச்’சாக இருக்கும். குறிப்பு: முந்திரிப்பால் அடிப்பிடிக்கும் என்பதால் குக்கரில் இந்த பிரியாணியை செய்யமுடியாது. பாத்திரத்தில் செய்யும்போது கூட, நன்கு கிளறிவிட வேண்டும். இல்லையெனில் அடிப்பிடித்து விடும்.

This page is powered by Blogger. Isn't yours?