<$BlogRSDURL$>

Monday, March 19, 2007

சடுதியில் சாம்பார் சாதம் 

குக்கரில் வைக்க

அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்

பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி
காய்கறிகள்

வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலைகொத்து
மல்லி
தாளிக்ககடுகு - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)

எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.

முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.

பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.

காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.

அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.

நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.

சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.

இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?