<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

ரஸமலாய் 

தேவையானவை:

பால் & ஏழரை கப், சர்க்கரை & 3 கப், வினிகர் & அரை டீஸ்பூன், குங்குமப்பூ, முந்திரி, பாதாம், பிஸ்தா & தலா 5 கிராம்.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதித்ததும் அதில் வினிகரை ஊற்றினால் பால் திரிந்து விடும். திரிந்த பாலை (தண்ணீரை வடித்துவிட்டு) மிக்ஸியில் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். கையாலும் மசித்துக் கொள்ளலாம். மசித்ததை மெதுவாக, (கண்டிப்பாக கைக்கு அழுத்தம் கொடுக்க கூடாது), ரொம்ப ரொம்ப மெதுவாக குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருட்டியதை ஒரு தட்டில் மெதுவாக வைக்கவும்.

பிறகு, 2 கப் சர்க்கரையை 2 கப் நீரில் கொதிக்க விட்டு, உருட்டிய உருண்டைகளை மெதுவாக போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது ஜீரா நன்கு உருண்டையில் ஊறி விடும். அதன் பிறகு, பிரஷர் பேனில் மீதி இருக்கும் ஐந்து கப் பாலை ஊற்றி, அது பாதியளவாக வற்றும் வரும் வரை சுண்டக் காய்ச்சவும். அதில் ஒரு கப் சர்க்கரையை போடவும். நன்கு வாசம் வந்ததும் ஊறிய உருண்டைகளை அதில் போடவும்.



பிறகு பொடியாக நறுக்கிய குங்குமப்பூ, முந்திரி, பாதாம், பிஸ்தா போட்டு அலங்கரிக்கவும். (விருப்பப்பட்டால் 6 அல்லது 7 முந்திரிகளை விழுதாக அரைத்து கலக்கலாம்). இந்த ரசமலாய் வீட்டுக்கும் விருந்துகளுக்கும் சும்மா ‘நச்’னு இருக்கும்.

வினிகருக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கலாம். கறந்த பாலில் செய்தால், இந்த ரசமலாய் கூடுதலாக சுவைக்கும்.

குண்டூரு கோங்குரா 

கோங்குரா எனப்படும் புளிச்சகீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் ஆந்திராவில் செய்யப்படும் அயிட்டங்கள் எக்கச்சக்கம். அவற்றுள் முக்கியமானது கோங்குரா ஊறுகாய்.

தேவையானவை:

புளிச்சகீரை & 2 கட்டு, புளி & சிறிய எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்தூள் & 2லிருந்து 3 டேபிள்ஸ்பூன், கடுகுத்தூள் & 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், பூண்டு & 8 பல் (விருப்பப்பட்டால்), பெருங்காயம் & அரை டீஸ்பூன், உப்பு & ருசிக்கேற்ப. தாளிக்க: நல்லெண்ணெய் & ஒன்றரை கப், கடுகு & 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 6 (இரண்டாகக் கிள்ளியது).



செய்முறை:

கீரையின் இலைகளை ஆய்ந்து சுத்தமாகக் கழுவி, ஈரம் போகத் துடைத்துக்கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒரு கப் கொதிக்கும் நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேருங்கள். பூண்டு சிறிது வதங்கியதும் கீரையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். கீரை நன்கு வதங்கியதும் புளித் தண்ணீர், மிளகாய்தூள், உப்பு சேர்த்து கீரை நன்கு சுருளும் வரை கிளறி இறக்குங்கள். ஆந்திரத்தில் இந்த ஊறுகாய்க்கு பல்வேறு செய்முறைகள் உள்ளன. இது அவசரத்துக்கு செய்யக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள், கடுகுடன் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்

நிமப்பண்டு பச்சடி 

எலுமிச்சங்காய் ஊறுகாய்

தேவையானவை:

எலுமிச்சம்பழம் (சற்றுப் பெரியதாக) & 12, மிளகாய்தூள் & அரை கப், உப்பு & அரை கப், மஞ்சள்தூள் & 1 டீஸ்பூன், நன்கு அழுத்தமான பச்சை நிறமுடைய பச்சை மிளகாய் & 8.



செய்முறை:

ஆறு எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறு எடுங்கள். பச்சைமிளகாயை கழுவித் துடைத்து லேசாகக் கீறிக் கொள்ளுங்கள். எலுமிச்சம்பழச் சாற்றில், மிளகாய்தூள், உப்புதூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொண்டு, மிளகாயையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். மீதமுள்ள ஆறு பழங்களை பொடியாக நறுக்கி, அதனுடன் சேருங்கள். நன்கு கலந்துவிடுங்கள். இது வருஷத்துக்கும் கெடாமல் அப்படியே இருக்கும். தேவையானபோது கடுகு தாளித்துக்கொள்ளலாம். அப்படியேயும் உபயோகிக்கலாம். எண்ணெய் சேர்க்காத ஊறுகாய் இது.

ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் 

ஆந்திரா என்றாலே ஊறுகாய் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆவக்காய் தயாரிப்பில் பல வகை செய்முறைகள் பயன்படுத்தப்பட்டாலும், இந்த செய்முறை ஆந்திராவிலேயே செய்யும் முறை.

தேவையானவை:

நல்ல முற்றின மாங்காய் (புளிப்பும் நாரும் உள்ள மாங்காய்) 6, நல்ல சிகப்பு நிறமுடைய மிளகாய்தூள் முக்கால் கப், கடுகுத்தூள் முக்கால் கப், உப்பு தூள் முக்கால் கப், நல்லெண்ணெய் ஒன்றரை கப், வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன், உரித்த பூண்டு 10 பல்.

செய்முறை:

மாங்காய்களை கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். நடுவில் இருக்கும் கொட்டையுடன் சேர்த்து, சற்று நடுத்தரமான துண்டுகளாக நறுக்குங்கள். மாங்கொட்டைக்குள் இருக்கும் மெல்லிய சருகு போன்ற தோலையும் பருப்பையும் நீக்குங்கள். மிளகாய்தூள், கடுகுத் தூள், உப்புத்தூள் ஆகியவற்றுடன் வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதனுடன் எண்ணெயையும் சேர்த்து, நன்கு குழைத்துக்கொள்ளுங்கள். நறுக்கிய மாங்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து, நன்கு பிசறி ஒரு ஈரமில்லாத ஜாடியில் அல்லது பாட்டிலில் போடுங்கள். ஜாடியின் வாய், விளிம்பு ஆகியவற்றை நன்கு துடைத்து, மூடிவையுங்கள்.



மூன்றாவது நாள் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, நன்கு கலந்துகொண்டு மீண்டும் ஜாடியில் அல்லது பாட்டிலில் எடுத்து சுத்தமாக துடைத்து வையுங்கள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, எண்ணெய் மேலே மிதந்து வரும். ஊற்றிய எண்ணெய் போதவில்லை எனில் மீண்டும் சிறிது ஊற்றிக்கொள்ளலாம்.
மாங்காய் துண்டுகள் நன்கு ஊறியபின், எடுத்து உபயோகிக்கலாம். ஊறுகாயை எடுக்கும்போது, மேலே நிற்கும் எண்ணெயை ஒதுக்கிவிட்டு, துண்டுகளை மட்டும் எடுக்கவேண்டும். அப்போதுதான், ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு வறண்டு போகாமல் இருக்கும். ஈரமான கையோ, கரண்டியோ போடக்கூடாது.
சூடாக இருக்கும் சாதத்தில், நல்லெண்ணெய் ஊற்றி, இந்த ஊறுகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் தெரியும் இதன் அபார சுவை!

வெங்காய வடகம் 

‘உரித்த சின்ன வெங்காயம் 8 கப், பச்சை மிளகாய் 10, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை பொடி யாக நறுக்குங்கள். ஒரு கப் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ஊறியதும் கழுவி, கிரைண்டரில் போட்டு அவ்வப்போது தண்ணீர் தெளித்து பஞ்சு போல ஆட்டிக் கொள்ளுங்கள். கிள்ளி வைப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை உளுந்து மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துகொண்டு, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்னதாகக் கிள்ளி வையுங்கள். (கலந்ததும் கிள்ளிவைக்கவேண்டும். பிசைந்த மாவை அதிக நேரம் வைத்திருந்தால் நீர்த்துவிடும்).

இரண்டு மூன்று நாட்கள் நன்கு காய வைத்து எடுத்து வையுங்கள். கறிவட கத்தை வறுக்கும் போது, நிதானமான தீயில் வடகம் மூழ்கும் அளவு எண்ணெய் ஊற்றி, பொரித்தெடுங்கள். தீ அதிகமாக இருந்தால் மேலே கருகியும் உள்ளே வேகாமலும் இருக்கும். இந்த வடகத்தைப் பொரித்து சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். வற்றல் குழம்பு தாளிக்கும்போது, வடகத்தையும் சேர்க்க லாம். குழம்பு வாசனையாகயும் ருசியாகவும் இருக்கும்.’’

இரவில் உண்ணக் கூடாதவை 

‘‘உணவு சாப்பிடுவதற்கான கட்டுப்பாடுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று, உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆயுர்வேத கோணம். இன்னொன்று, நம் கலாசாரம் சார்ந்தது.

வயிற்றில் இருக்கும் உணவுப் பொருட்களை ஜீரணிக்க ‘ஜாடராக்கினி’ என்று சொல்லப்படும் உஷ்ணம் இருக்கிறது. சூரியனின் கதிர்கள் இந்த ஜாடராக்கினிக்கு உதவி செய்யும். சூரியன் அஸ்தமித்த பிறகு இந்த ஜாடராக்கினி பலவீனமாகிவிடுகிறது என்பதால், அந்த நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவைத்தான் சாப்பிட வேண்டும். ‘இரவில் படுத்துவிடுகிறோம்; கர்மேந்திரியங் களுக்கோ, ஞானேந்திரியங்களுக்கோ வேலை இல்லை’ என்பதாலும், எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.

கட்டித் தயிர், எளிதில் ஜீரணம் ஆகாதது. இரவில் அதை சாப்பிட்டால், ஜீரணம் ஆகாமல் கபத்தைப் பெருக்கி, நோய் வரச் செய்யும். ‘ஏற்கெனவே வியாதி இருப்பவர்களுக்கு அது இரட்டிப்பாகும்; வியாதி இல்லாதவர்களுக்கு வியாதி வரும்’ என்கிறது ஆயுர்வேதம்.

தர்ம சாஸ்திரமோ ‘இரவில் தயிர் சாப்பிட்டால் லட்சுமிகரம் இருக்காது... செல்வம் போய்விடும்’ என்கிறது. தயிர் தரும் மந்தத்தனத்தால் சிந்திக்கும் திறன் குறைந்து, செயல்பாட்டில் குறை ஏற்பட்டு, நாளடைவில் எதற்கும் லாயக்கில்லாமல் போனால் லட்சுமி போகத் தானே செய்வாள்? காலை வேளையில் பழைய சாதம், கட்டித் தயிர், வடுமாங்காய் கொடுத்து வயிறு நிறைய சாப்பிடச் சொல்லுங்கள். பத்து நிமிடத்தில் ‘கொஞ்சம் தூங்கிவிட்டு வேலை செய்கிறேனே...’ என்று கண் செருகுவார். சோம்பேறித்தனம் வருகிறதல்லவா? இந்த சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும் தயிரை தினப்படி இரவு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். இரவில் தயிர் சாப்பிட்டால் அதற்கு முன்பு சாப்பிட்ட அனைத்தும் ஜீரணம் ஆக காலதாமதம் ஆகும். ஊளைச் சதைதான் வளரும்.

உணவுக் கலவையும் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம். இரவில் பால் சாதம் சாப்பிட்டுவிட்டு தயிரைக் குடிக்கக் கூடாது. மோர் சாதம் சாப்பிட்டுவிட்டு பாலைக் குடிக்கக் கூடாது. காரணம், பால் என்பது நேரடியாக மடுவில் இருந்து வந்து வெறுமனே சூடுபடுத்தப்பட்டு இயல்பு மாறாமல் இருப்பது. தயிரோ ஒரு நாள் வைக்கப்பட்டு புளிப்பு ஏறி திடத்தன்மை அதிகரித்து இருப்பது. இரண்டும் சேரக்கூடாது. சேர்ந்தால் பசி, ஜீரணம் ஆகியவற்றில் குறைபாட்டை உண்டாக்கும்.
முன்பெல்லாம் இரவில் கீரை வாங்கப் போனால் கிடைக்காது. ஏனெனில், கீரை வகைகளை இரவில் உண்ணக் கூடாது. அது எளிதில் ஜீரணமாகாதது. கீரை மட்டுமல்ல, இலையும் தண்டுமாக இருக்கிற எந்த வகை யையும் இரவு சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

இரவு உணவை பாலில்தான் முடிக்க வேண்டும். பாலுக்குப் பிறகு எதையும் (வாழைப்பழம் உட்பட) சாப்பிடக்கூடாது. இனிப்போ காரமோ தனித்து உண்ணாமல், துவர்ப்பு சுவையில்தான் இரவு உணவு முடியவேண்டும்.
பகல் உணவில் திடம் அதிகமாகவும் திரவம் குறைவாக வும் இருக்கவேண்டும். இரவு உணவில் திடம் குறைந்தும் திரவம் அதிகமாகவும் இருக்கவேண்டும். கிழங்கு போன்ற கனமான பொருட்களை இரவில் தனித்துப் பயன்படுத்தக் கூடாது. அதை ஜீரணிக்க உதவும் பொருட்களோடு சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் சீக்கிரமே ஜீரணம் ஆவது போல பக்குவமான பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை, 9 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது மிகவும் நல்லது.



தயிர் சாதத்துடன் பச்சடி, அப்பளத்துடன் புளி இஞ்சி போன்ற கூட்டணியெல்லாம் இரவு நேரத்தில் கூடாது. கடைந்த மோர்தான் நல்லது. அதிலும், ஒரு பங்கு தயிர் என்றால் மூன்று பங்கு தண்ணீர் இருக்கவேண்டும்.
இரவில் சாப்பிடக்கூடாத இன்னொரு விஷயம், நெல்லிக்காய். பச்சைக் காய்கறிகளையும் இரவில் உணவில் சேர்க்கக்கூடாது. வேகவைத்த காய்கறிகள்தான் சிறந்தவை. பச்சைக் காய் கறிகளில் செய்த ஒரு பதார்த்தத்தையும் வேக வைத்த ஒன்றையும் சேர்த்து இரவில் உண்ணக் கூடாது.
காலையில் சமைத்த உணவை, ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதுதான். அப்போதே சமைத்த உணவாக இருப்பது நலம்.

சிலவேளைகளில் தொடர்ந்த பழக்கத்தால், சிலரின் உடல் சில உணவுகளை ஏற்றுக்கொண்டு விடுகிறது. அது அவர்களுக்கு எந்த கெடுதலும் செய்வதில்லை. சிறு வயதிலிருந்தே பழகி, உடல் அதை ஏற்றுக் கொண்டுவிட்டால், அது போன்ற உணவுகளை சாப்பிடலாம், தப்பில்லை!

உணவு குறித்த பொதுவான சில தகவல்கள்..

எதை எல்லாம் நெருப்பு கொண்டு சமைக்கிறோமோ அதை எல்லாம் சூடாகச் சாப்பிட வேண்டும். சில பொருட்களை சூடாக்கவே கூடாது.

உணவில் நெய்யின் மெழுகுத்தன்மை கலந்திருக்க வேண்டும். அல்லது காய்கறிகளின் மெழுகுத்தன்மை யாவது இருக்கவேண்டும். அளவோடு சாப்பிட வேண்டும்!

‘பகலில் முக்கால் வயிறும் இரவில் அரை வயிறும் சாப்பிடு’ என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை!’’

நன்றி : அவள் விகடன்

Monday, February 20, 2006

முப்பது வகை பழ உணவு வகைகள் 

இது பழங்கள் சீஸன்!

எங்கு பார்த்தாலும் எல்லா வகைப் பழங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ‘உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம்’ என்னும் விழிப்பு உணர்வு பரவியிருப்பதால், பழங்களை மொய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.
ஜூஸ், ஜாம், சாலட் என்று வழக்கமான அயிட்டங்களிலேயே பழங்களை பயன்படுத்தி அலுத்திருக்கும் உங்களுக்கு, அவற்றை வைத்து சுவை ததும்ப 30 வகை உணவுகளைச் செய்து காட்டி அசத்தியிருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். செய்து, பரிமாறி சுவைத்து மகிழுங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.



ஆப்பிள் பை

தேவையானவை:

ஆப்பிள் 4, சர்க்கரை முக்கால் கப், பிரெட் 12 முதல் 15 ஸ்லைஸ், ஃப்ரெஷ் க்ரீம் 1 கப், வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். கிளறும்போதே சற்று மசித்துவிடுங்கள். சர்க்கரை நன்கு கரைந்து, சேர்ந்தாற்போல வந்ததும் இறக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸியில் பொடியுங்கள். ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெயை நன்கு தடவுங்கள். அதன் மேல் பிரெட் தூளை அரை அங்குல கனத்துக்கு போட்டு நன்கு அழுத்துங்கள். அதன் மேல் ஆப்பிள் கலவையை பரவினாற் போல் போடுங்கள். அதன் மேல் மீண்டும் பிரெட் தூளை கால் அங்குல கனத்துக்கு தூவி சற்று அழுத்துங்கள். 180 டிகிரி சென்டிகிரேடில் பொன்னிற மாகும் வரை பேக் செய்யுங்கள். ஃப்ரெஷ் க்ரீமுடன் பரிமாறுங்கள்.
‘கேக் அவன்’ இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து ‘பேக்’ செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.


பைனாப்பிள் கேசரி

தேவையானவை:

அன்னாசிப் பழம் கால் பாகம், ரவை 1 கப், சர்க்கரை 2 கப், நெய் கால் கப், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் 2 டீஸ்பூன், ஃபுட் கலர் (மஞ்சள்) கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 6.

செய்முறை:

அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து, அரை மணி நேரம் வையுங்கள். ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய், எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள். நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடுங்கள்.
பின்னர் அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற, சுவையான ஸ்வீட் இது.

ஆரஞ்சு பிஸ்கட்

தேவையானவை:

மைதா 1 கப், வெண்ணெய் 75 கிராம், சர்க்கரை கால் கப், ஆரஞ்சு எசன்ஸ் 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் கால் கப்.

செய்முறை:

பேக்கிங் பவுடர், மைதா இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு குழையுங்கள். அதனுடன் மைதா சேர்த்து பிசறுங்கள். கடைசியில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பிசைந்து, சற்று கனமான சப்பாத்திகளாக இடுங்கள்.
சப்பாத்திகளை பிஸ்கட் கட்டரால் வெட்டி, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ட்ரேயில் அடுக்கி, ‘கேக் அவன்’ இருப்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.
‘அவன்’ இல்லாதவர்கள், ‘ஆப்பிள் பை’ செய்முறையில் குறிப்பிட்டுள்ளது போல் ‘பேக்’ செய்யுங்கள்.

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை:

காய்ச்சிய பால் 2 கப், நன்கு பழுத்த சப்போட்டா 3, பாதாம்பருப்பு 8, சர்க்கரை தேவைக்கேற்ப.

செய்முறை:

சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள். அந்தத் துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் கால் கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்குங்கள். இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். குழந்தைகள், ‘அம்மா, இன்னொரு கிளாஸ்!’ என்று கேட்பார்கள்.

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையானவை:

காய்ச்சி குளிர வைத்த பால் 2 கப், ஸ்ட்ராபெர்ரி 8, ஃப்ரெஷ் க்ரீம் அரை கப், சர்க்கரை சுவைக்கேற்ப.

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி துடைத்து, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரையுங்கள். அதனுடன் பால் சேர்த்து விப்பர் பிளேடால் இரண்டு, மூன்று முறை அடியுங்கள். பின்னர் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இரண்டு முறை அடித்து, குளிர வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு: ஸ்ட்ராபெர்ரியின் விதை கரகரப்பு பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்கை வடிகட்டி, அத்துடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்து பரிமாறுங்கள்.

கொய்யாப் பழ ஜூஸ்

தேவையானவை:

கொய்யாப்பழம் 4, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், புதினா இலை அல்லது துளசி இலை 10, சர்க்கரை 34 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, மிளகு தூள் கால் டீஸ்பூன்.

செய்முறை:

கொய்யாப்பழங்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிக்ஸியில் கொய்யா துண்டுகள், எலுமிச்சம்பழச் சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுதூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, குளிர வையுங்கள். பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலை சேர்த்து பரிமாறுங்கள். இதுவரை பருகியிராத ருசியில் அசத்தல் ஜூஸ்.

சாத்துகுடி ஸ்பைஸி ஜூஸ்

தேவையானவை:

சாத்துகுடி 4, புதினா 6 முதல் 8 இலைகள், துளசி 10 இலைகள், சீரகத்தூள் அரை டீஸ்பூன், மிளகுதூள் கால் டீஸ்பூன், கறுப்பு உப்பு கால் டீஸ்பூன், சர்க்கரை ருசிக்கேற்ப.

செய்முறை:

சாத்துகுடியை பிழிந்து சாறு எடுங்கள். துளசியை கால் கப் தண்ணீரில் அரைத்து வடிகட்டுங்கள். புதினாவை பொடியாக நறுக்குங்கள். மிளகுதூள், சீரகத்தூள், கறுப்பு உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, குளிரவைத்து பரிமாறுங்கள்.

நாரத்தம்பழ சாதம்

தேவையானவை:

பச்சரிசி 2 கப், நாரத்தம்பழம் 1, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கு.
தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். சூடாக உள்ள சாதத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் நடுவில் மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மூடுங்கள். பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சி, மிளகாய் கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் சேருங்கள். தேவையான உப்பு, நாரத்தம்பழச் சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

தேவையானவை:

ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள் அரைத்த விழுது 2 கப், சர்க்கரை 1 கப், சிட்ரிக் ஆசிட் அரை டீஸ்பூன், டோனோவின் எசன்ஸ் 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு கனமான பாத்திரத்தில் வைத்து சிறு தீயில் நன்கு கிளறுங்கள். ‘ஜாம்’ பதம் வந்ததும் (சிறிது எடுத்து ஒரு தட்டில் விட்டால் முத்து போல் நிற்கும் பதம்), எசன்ஸ் சேர்த்து அரை நிமிடம் கிளறி இறக்கி பாட்டிலில் ஊற்றுங்கள். (பாட்டிலை ஒரு பலகையின் மேல் நிறுத்தி ஊற்றினால் பாட்டில் உடையாது).

சீதாப்பழ பாயசம்

தேவையானவை:

பால் 1 லிட்டர், சீதாப்பழம் (நன்கு பழுத்தது) 2, சர்க்கரை ருசிக்கேற்ப, ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்.

செய்முறை:

பாலைக் காய்ச்சி சர்க்கரை சேருங்கள். மேலும் 1015 நிமிடங்கள் நடுத்தர தீயில் கொதிக்க விடுங்கள். சீதாப்பழத்தை இரண்டாக உடைத்து சதை பகுதியை தனியே எடுங்கள். கையால் நன்கு பிசையுங்கள். பாலை அடுப்பில் இருந்து இறக்கி ஏலக்காய்தூள், சீதாப்பழம் சேர்த்து கிளறி பரிமாறுங்கள். குளிர வைத்துப் பருகினால், சுவை ஜோர்!

நேந்திரம் பழம் பொரிச்சு

தேவையானவை:

நேந்திரம்பழம் 2 (கெட்டியான பழம்), மைதா ஒன்றரை கப், தேங்காய்ப்பால் அரை கப், சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, மஞ்சள் கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

நேந்திரம்பழத்தை பஜ்ஜிக்கு நறுக்குவது போல் நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேவையான பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து பழத்துண்டுகளை மாவில் அமிழ்த்தி எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். கேரளாவின் பிரபலமான அயிட்டம் இந்த ‘பழம் பொரிச்சு’.

ஆரஞ்சு புலவு

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப், ஆரஞ்சு சாறு 2 கப், பட்டை 1 துண்டு, லவங்கம் 2, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
தாளிக்க: பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, பட்டாணி ஒரு கைப்பிடி, முந்திரிப்பருப்பு 5, நெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் ஒரு குக்கரில் பட்டை, லவங்கம், உப்பு ஊற வைத்த அரிசி (அரஞ்சு சாறுடனேயே) சேர்த்து கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்குங்கள்.
நெய்யை காய வைத்து, முந்திரிப்பருப்பு தாளித்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், சிட்டிகை உப்பு, பட்டாணி சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி புலவில் சேருங்கள். நன்கு கிளறி பரிமாறுங்கள். வித்தியாசமான சுவையுடன் மணக்கும் ஆரஞ்சு புலவு இது.

ஃப்ரூட் அண்ட் நட் புலவு

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப், ஆப்பிள், திராட்சை, பைனாப்பிள் (மூன்றும் பொடியாக நறுக்கிய) கலவை 1 கப், பாதாம், முந்திரி (பொடியாக நறுக்கியது) 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: பட்டை 2 துண்டு, லவங்கம் 3, ஏலக்காய் 3, பச்சை மிளகாய் 5, நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். நெய்யை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், கீறிய மிளகாய், பாதாம், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பழங்களை சேருங்கள். 2 நிமிடம் வதக்கி சாதத்தையும் சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள். படு ‘கிராண்டா’ன அயிட்டம் இது.

ஆப்பிள் அல்வா

தேவையானவை:

ஆப்பிள் 2, பால்கோவா அரை கப், சர்க்கரை அரை கப், நெய் கால் கப், ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு சிறியது 1 டேபிள்ஸ்பூன், பாதாம் (சீவியது) 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளுங்கள். நெய்யை காய வைத்து பாதாம், முந்திரியை வறுத்து எடுத்து கொண்டு ஆப்பிளை சேருங்கள். சிறு தீயில் நன்கு கிளறுங்கள். 10 நிமிடம் கிளறிய பின் கோவா, சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். இது சற்று இளகி, மீண்டும் சேர்ந்து வரும் பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்குங்கள்.


இலந்தைப்பழ வடை

தேவையானாவை:

சிறிய இலந்தைப்பழம் 4 கப், புளி (சற்று பழையது) எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 8 முதல் 10, வெல்லம் ஒரு சிறிய அச்சு, உப்பு தேவைக்கேற்ப, பெருங்காயம் 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

இலந்தைப்பழத்தை கழுவி துடைத்து நன்கு கசக்கி, விதைகளை எடுத்துவிடுங்கள். பெருங்காயத்தை பொரித்து எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து எடுங்கள். சிறு சிறு வடைகளாக தட்டி வெயிலில் உலர்த்தி எடுங்கள். இனிப்பும், புளிப்பும், காரமும் கலந்த பிரமாதமான சுவை தரும் வடை இது.

பூவன் பழ அப்பம்

தேவையானவை:

கோதுமை மாவு அரை கப், அரிசி மாவு 2 கப், நன்கு கனிந்த பூவன்பழம் 2, வெல்லம் 2 கப், தேங்காய் பல், பல்லாக கீறியது 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன், நெய் அரை கப், எண்ணெய் அரை கப், ஆப்ப சோடா 2 சிட்டிகை.

செய்முறை:

மாவுகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பூவன்பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேருங்கள். தேங்காய் துண்டுகளை 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து சேருங்கள். வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்கு கரையுங்கள். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். குழிப் பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி சிறு தீயில் நன்கு வேக விடுங்கள். மறு புறம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

எலுமிச்சம்பழ ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் 2 கப், தக்காளி 3, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் கால் டீஸ்பூன், சாம்பார் பொடி அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு, மல்லித்தழை சிறிது.

பொடிக்க:

மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஒன்றரை தக்காளி பழத்தை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து வடிகட்டுங்கள். மீதமுள்ள தக்காளியை பொடியாக நறுக்குங்கள். ஒன்றரை கப் தண்ணீரில் தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், உப்பு, கீறிய பச்சை மிளகாய், சாம்பார் பொடி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை போட்டு, பொடித்து வைத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நடுத்தர தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும், பருப்பு தண்ணீரை 2 முறை நுரைக்க ஆற்றி அதனுடன் சேர்க்கவும். நுரைத்து வந்ததும் இறக்கி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேருங்கள். எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாறுங்கள்.

ஃப்ரூட் கஸ்டர்ட்

தேவையானவை:

பால் 2 கப், வெனிலா, கஸ்டர்ட் பவுடர் ஒன்றரை டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பழக்கலவை 1 கப், சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரையுங்கள். மீதியுள்ள பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்கும்பொழுது கஸ்டர்ட் கரைசலை ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு கொதிக்கவிட்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்குங்கள். ஆறியதும் பழங்கள் சேர்த்து குளிர வைத்து பரிமாறுங்கள்.

திராட்சை பானி பூரி

தேவையானவை:

பூரிகள் 25, உருளைக்கிழங்கு 2, பட்டாணி கால் கப், பச்சை மிளகாய் 1, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு, மசாலா நீர், பச்சை திராட்சை 1 கப், பச்சை சட்னி 3 டேபிள்ஸ்பூன், இனிப்பு சட்னி 1 டேபிள்ஸ்பூன், தண்ணீர் ஒன்றரை கப்.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் பட்டாணியையும், வேக வைத்து சேருங்கள். மிளகாய், மல்லி பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு கலந்து பிசறி வையுங்கள். திராட்சையை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி அதனுடன் பச்சை, இனிப்பு சட்னிகளை கலந்து குளிர வையுங்கள். பரிமாறும்போது, பூரியை லேசாக துளை செய்து அதனுள் உருளை மசாலாவை சிறிது வைத்து மசாலா நீரூற்றி பரிமாறுங்கள்.
குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்து பரிமாறலாம்.

கற்பூர வாழை டாஃபி

தேவையானவை:

கற்பூர வாழைப்பழ கூழ் 1 கப், சர்க்கரை முக்கால் கப், குளுகோஸ் 4 டீஸ்பூன், வெண்ணெய் 50 கிராம், பால் பவுடர் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கற்பூர வாழைப்பழங்கள் மூன்றை தோலுரித்து துண்டுகளாக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஆறியவுடன் மிக்ஸியில் அடித்து கூழ் எடுத்துக்கொள்ளுங்கள். பழக்கூழுடன் சர்க்கரை, குளுகோஸ் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். பொன்னிறமாக நிறம் மாறியதும் வெண்ணெய், பால்பவுடர் (சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்) சேர்த்து நன்கு ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி, ஒரு நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சற்று ஆறியவுடன் துண்டுகள் போடுங்கள். குழந்தைகளுக்கு பயமில்லாமல் கொடுக்கக்கூடிய சத்தான டாஃபி.

பலாப்பழ கொழுக்கட்டை

தேவையானவை:

பலாச் சுளைகள் 10, வெல்லம் முக்கால் கப், நெய் 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், பச்சரிசி 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, தண்ணீர் ஒன்றரை கப், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்துங்கள். சற்று ஈரம் இருக்கும்போதே நைஸாக அரைத்து சலியுங்கள். தண்ணீருடன் உப்பு, நெய் சேர்த்து கொதிக்க வைத்து மாவு சேர்த்து நன்கு கிளறுங்கள். இறக்கி, சற்று ஆறியதும் நன்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு மூடி வையுங்கள். பலாப்பழ சுளைகளை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து சுளைகளை சேர்த்து குறைவான தீயில் நன்கு கிளறுங்கள். பழம் சற்று வெந்ததும் நன்கு மசித்து கொள்ளுங்கள். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி பலாப்பழ மசியலுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சற்று கெட்டியானதும் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். ஒரு வாழை இலையில் சிறிது மாவை எடுத்து வைத்து மற்றொரு இலையில் மூடி ஒரு கிண்ணத்தால் அழுத்தவும். (இது சிறிய தோசை போலிருக்கும்) மேலே உள்ள இலையை எடுத்து விட்டு அழுத்திய மாவின் மேல் பழக்கலவையை சிறிது வைத்து இலையை மடித்து மூடி, ஆவியில் வேக வையுங்கள். சாப்பிடும்பொழுது கொழுக்கட்டையை உரித்து எடுத்து பரிமாறுங்கள். பலாப்பழமும் வெல்லமும் சேர்ந்து மணக்க மணக்க விருந்து படைக்கும்
குறிப்பு: சுளைகளின் அளவுக்கேற்ப வெல்லத்தைக் கூட்டி, குறைத்து போடலாம்.

பேரீச்சம்பழ கேக்

தேவையானவை:

மைதா இரண்டரை கப், வெண்ணெய் ஒன்றேகால் கப், பால் ஒன்றரை கப், கண்டன்ஸ்டு பால் 1 டின் (400 மிலி), பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) அரை கப், ஆப்ப சோடா 1 டீஸ்பூன் (தலைதட்டி), பேக்கிங்சோடா 2 டீஸ்பூன் (தலை தட்டி), வெனிலா எசன்ஸ் 1 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை 5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

மைதா 2 டீஸ்பூன் தனியே எடுத்து வைத்துவிடுங்கள். பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலியுங்கள். பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள். சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள். பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள். அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள். கடாயிலும் செய்யலாம்.

மாம்பழ சாம்பார்

தேவையானவை:

துவரம்பருப்பு அரை கப், நல்ல இனிப்புள்ள மாம்பழம் 2, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்தூள் இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை:

பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். மாம்பழத்தை தோல், விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். பருப்பில் வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். வெங்காயம் முக்கால்பதம் வெந்தபின் புளியை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பருப்பில் ஊற்றுங்கள். இது பச்சை வாசனை போக கொதித்ததும் மாம்பழத்தை கையால் லேசாக பிசைந்து சேருங்கள்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேருங்கள்.

வெள்ளரி பழ குழம்பு

தேவையானவை:

வெள்ளரிப் பழம் 1, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய் துருவல் அரை கப், காய்ந்த மிளகாய் 6.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வெள்ளரிப் பழத்தை தோல், விதை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாக கரையுங்கள். தேங்காயையும் மிளகாயையும் ஒன்றாக அரையுங்கள். 2 கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் வெள்ளரி பழ துண்டுகள், உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
பின்னர் புளி தண்ணீர், அரைத்து விழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம் சேருங்கள். சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி குழம்பில் சேருங்கள். ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

மாதுளை முந்திரி தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், மாதுளை முத்துக்கள் 1 கப், பட்டாணி ஒரு கைப்பிடி, வாழைத்தண்டு 1 சிறிய துண்டு, உப்பு தேவைக்கு, தாளித்த கடுகு அரை கப், அரைத்த தேங்காய் துருவல் கால் கப், பச்சை மிளகாய் 2, முந்திரிப்பருப்பு 6.

செய்முறை:

பட்டாணியை வேக வையுங்கள். வாழைத்தண்டை மிகவும் பொடியாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவிடுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், முந்திரியை ஒன்றாக அரைத்து தயிரில் கலக்குங்கள். அத்துடன், உப்பு, வாழைத்தண்டு, பட்டாணி, மாதுளை முத்துக்கள், அரைத்த விழுது சேர்த்து, கடுகு, தாளித்து கலந்து பரிமாறுங்கள்.

தக்காளிப்பழ தொக்கு

தேவையானவை:

நன்கு பழுத்த தக்காளி 1 கிலோ, காய்ந்த மிளகாய் 25, புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு ருசிக்கேற்ப, பூண்டு 5 பல்.
வறுத்துப் பொடிக்க: வெந்தயம் அரை டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, நல்லெண்ணெய் அரை கப், கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

தக்காளியைக் கழுவி, துடைத்து புளி, உப்பு சேர்த்து
மிக்ஸியில் அரையுங்கள். மிளகாயை காம்பு நீக்கி, கொதிக்கும் நீரில் 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்பு மிளகாயை அரைத்து, தக்காளியுடன் சேருங்கள். வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொன்னிறமாக வறுத்து பொடியுங்கள். பூண்டை தோலுரித்துப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, மிளகாய், தாளித்து, பூண்டைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அத்துடன் தக்காளி விழுதைச் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின்னர், வெந்தயம், பெருங்காயம் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

பப்பாளி சாலட்

தேவையானவை:

பப்பாளி பழம் 1, சீரகத்தூள் 1 டீஸ்பூன், மிளகுதூள் அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன், உப்பு தேவையானது.

செய்முறை:

பப்பாளி பழத்தை தோல், விதை நீக்கி, துண்டுகளாக்குங்கள். அதனுடன் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறுங்கள். எந்த நேரத்துக்கும் ஏற்ற எளிய சாலட் இது.

மாம்பழ மோர் குழம்பு

தேவையானவை:

புளிக்காத தயிர் 1 கப், இனிப்பான மாம்பழம் 1 (நடுத்தர சைஸ்), கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 3, மல்லித்தழை ஒரு கைப்பிடி, சீரகம் அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

தயிருடன் உப்பு, பெருங்காயத்தூள், அரை கப் தண்ணீர், மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கடைந்துகொள்ளுங்கள். மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி கையால் லேசாக பிசைந்து தயிருடன் சேருங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து அதனுடன் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து மோர், மாம்பழ கரைசலை சேர்த்து கொதி வந்ததும் இறக்குங்கள்.

விளாம்பழ பர்ஃபி

தேவையானவை:

விளாம்பழ கூழ் 1 கப், தேங்காய் துருவல் அரை கப், ரவை 1 கப், பால் 1 கப், நெய் 1 கப், முந்திரி (நறுக்கியது) அரை கப், சர்க்கரை இரண்டரை கப்.

செய்முறை:

விளாம்பழத்தை மிக்ஸியில் சற்று நைஸாக அரையுங்கள். அத்துடன் கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிளறி சுருண்டு வரும்போது, நெய் தடவிய ப்ளேட்டில் கொட்டி ஆறியவுடன் துண்டுகள் போடுங்கள்.
புதுமையான சுவையில் அருமையான ஒரு ஸ்வீட் ரெடி!

மாம்பழ மூஸ்

தேவையானவை:

மாம்பழ துண்டுகள் அரை கப், கண்டன்ஸ்டு பால் 4 டேபிள்ஸ்பூன், ஜெலட்டின் (ஜெல்) 1 டீஸ்பூன், பால் அரை கப், மாம்பழக் கூழ் 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை 4 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் அரை கப்.

செய்முறை:

பாதி அளவு பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். மீதி உள்ள பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேர்த்துக் கிளறுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி ஆறவிடுங்கள். ஆறியதும் கண்டன்ஸ்டு பால் சேர்க்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடுங்கள். (இறுதியில்) இது கரைந்ததும் பால் கலவையில் ஊற்றி நன்கு கலக்குங்கள். ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிரவைத்தால், சற்று கெட்டிப்படும். மீண்டும் எடுத்து மாம்பழக்கூழ், பழத்துண்டுகள் சேர்த்து நன்கு கலக்குங்கள். க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிதளவு ஐஸ் கட்டிகளின் மேல் வைத்து நன்கு அடித்து, சற்று கெட்டியானதும் இதனுடன் சேர்த்து குளிர வைத்து பரிமாறுங்கள்.


Wednesday, February 01, 2006

ஆந்திரா ஸ்பெஷல் 

புளிஹாரா



தேவையானவை:

பச்சரிசி 2 கப், நல்லெண்ணெய் 20 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, புளி சிறிய உருண்டை, பெருங்காய தூள் சிட்டிகை, உப்பு தேவைக்கு, வெல்லத்தூள் 2 டீஸ்பூன்.
தாளிக்க: நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, பச்சை மிளகாய் 1, கறிவேப்பிலை சிறிது. அரைக்க: கடுகு 1 டீஸ்பூன்.

செய்முறை:

சாதத்தை குழையாமல் பக்குவமாக வடிக்கவும். ஒரு பேசினில் வடித்த சாதத்தை சூடாக குவித்து கொட்டவும். குவித்த சாதத்தின் நடுவில் சிறிய பள்ளம் போல செய்யவும். அதில் நல்லெண்ணெய், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மூடவும். புளியைக் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்த புளியை சேர்க்கவும். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம் சேர்த்து இறக்கி சாதத்தில் சேர்க்கவும். கடுகை பச்சையாக அரைத்து அதையும் சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். ஆந்திரத்தின் மிக பிரபலமான இந்த சாதம், நம்ம ஊர் புளி சாதத் தைப் போன்றது.

பெசரட்டு



தேவையானவை:

பாசிப்பயறு 1 கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, உப்பு தேவைக்கு, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: சீரகம் டீஸ்பூன், வெங்காயம் 3, உப்பு சிட்டிகை, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2.

செய்முறை:

பாசிப்பயறை 3 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்கு கழுவி களைந்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கரைக்கவும். (இந்த மாவு நுரை போலிருக்கும்).
மிளகாய், வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய் உப்பு சேர்த்து சிறிது வதக்கி எடுக்கவும். தோசைக்கல்லை காய வைத்து ஒரு கரண்டி மாவெடுத்து மெல்லிய தோசையாக தேய்க்கவும். அதன் மேல் வெங்காயக் கலவையை சிறிது தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டு மடித்து எடுக்கவும். இஞ்சி துவையலுடன் பரிமாறவும். ஆந்திரா என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் பெசரட்டும் ஒன்று.
பாம்பே ரவையை உப்புமா செய்து, அதில் சிறிதளவை பெசரட்டின் நடுவில் வைத்து எடுத்து அதனுடனேயே சேர்ந்தாற்போல் சாப்பிடுவது வேறுவிதமான சுவை.

சௌ சௌ பச்சடி



தேவையானவை:

சௌசௌ 1 சிறியதாக, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 4 அல்லது 5, புளி நெல்லிக்காயளவு, வெங்காயம் பாதி, பூண்டு 3 பல், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சௌசௌவை நன்கு கழுவி இரண்டாக நறுக்கி, விதை நீக்கி மெல்லியதாக நறுக்கவும். (தோலுடன்) எண்ணெயை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன் நிறமானதும் சௌசௌ முதல் உப்பு வரை எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, விப்பர் பிளேடால் விட்டு, விட்டு அரைக்கவும். சற்று கரகரப்பாக அரைத்து எடுத்து பரிமாறவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும் இந்தக் கூட்டு.

சுடு தேங்காய் 

தேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96) வீட்டுக்கு போன போது, இதை எனக்கு இதை எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.

தேவையான பொருட்கள்:

1. குடுமியுடன் ஒரு நல்ல முத்திய தேங்காய்.
2. பொட்டுகடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி
3. வெல்லம் - - ஒரு பிடி
4. கற்கண்டு - அரை பிடி
5. அவல் - ஒரு பிடி
6. முந்திரி பருப்பு - அரை பிடி
7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன்
8. நெருப்பு பொட்டி, காய்ந்த குச்சிகள்
9. இலை, மரத்தடி.

செய்முறை:

முதலில் தேங்காயின் குடுமியை புடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிற ) எல்லாவறையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேறுங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.

ராத்திரி ஆனவுடன், நண்பர்களுடன் மரத்தடிக்கு போய் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பத்தவைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். கொஞ்ச நேரத்தில் ஒரு அருமையான வாசனை வரும். பொருங்கள். சிறிது நேரத்தில் கழித்து தேங்காய் மேல் ஓடு கருப்பாகிவிடும். மெதுவாத அதை ஒரு குச்சியில் தட்டி நெருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். சூடு தணிந்த பின் எல்லோரும் உடைத்து சாப்பிடவேண்டியதுதான்.

அந்த சுவையை வர்ணிக்க முடியாது.

பிகு: கியாஸ் அடுப்பு, மைக்ரோ வேவ் போன்றவற்றில் சமைக்க முடியாது.

நன்றி : தேசிகன் (சுஜாதா)

தோசை மாசம் - முப்பது வகை தோசை 

மரவள்ளிக் கிழங்கு தோசை

தேவையானவை: புழுங்கலரிசி 1 கப், மரவள்ளிக் கிழங்கு சிறியதாக 1, காய்ந்த மிளகாய் 6, சீரகம் 1 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்) ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு, எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.

தக்காளி தோசை



தேவையானவை:

பச்சரிசி ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், தக்காளி 4, தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

கேழ்வரகு தோசை

தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு அரை கப், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும். இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

பரங்கிக்காய் அடை



தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு அரை கப், துவரம்பருப்பு முக்கால் கப், பாசிப்பருப்பு கால் கப், காய்ந்த மிளகாய் 10, சோம்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் 6, உப்பு தேவைக்கேற்ப, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) கால் கப், எண்ணெய் தேவையான அளவு, பிஞ்சு பரங்கிக்காய் 1 துண்டு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும். மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும். மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும். துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.
பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).

தூதுவளை தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், தூதுவளை இலை 15, மிளகு 10, சீரகம் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும். பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.

ஆப்பம்

தேவையானவை:

பச்சரிசி 1 கப், புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு கால் கப், வெந்தயம் 1 டீஸ்பூன், ஜவ்வரிசி 3 டீஸ்பூன், உப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் கல்லில் தடவ தேவையான அளவு, தேங்காய் (துருவியது) 1 மூடி, சர்க்கரை அரை கப்.

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும். சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.
குறிப்பு: ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை.

மைதா மாவு தோசை

தேவையானவை:

மைதா மாவு 1 கப், பச்சரிசி மாவு முக்கால் கப், உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 2 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், மிளகு 10, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, எண்ணெய் (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். மிளகை உடைத்துக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும். அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும். வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

வெல்ல தோசை

தேவையானவை:

கோதுமை மாவு 2 கப், வெல்லம் (பொடித்தது) 1 கப், பச்சரிசி கால் கப் (அல்லது பச்சரிசி மாவு கால் கப்), தேங்காய் (துருவியது) கால் மூடி, ஏலக்காய் 4, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

ஆலு வெந்தயக்கீரை தோசை

தேவையானவை:

தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) 1 கப், உளுத்தம்பருப்பு இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ, தக்காளி 1, வெங்காயத் தாள் 1 செடி, பெரிய வெங்காயம் 1, வெந்தயக்கீரை 1 கட்டு, மிளகாய்தூள் கால் டீஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 6 டீஸ்பூன், வெண்ணெய் 1 பாக்கெட்.

செய்முறை:

இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.
பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.


மசால் தோசை

தேவையானவை:

தோசை மாவு 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு 3, தக்காளி 1, பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) கால் கப், சோம்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை 1 கப்.

துவையலுக்கு: தேங்காய் துருவல் அரை மூடி, பச்சை மிளகாய் 4, உப்பு, இஞ்சி ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு 2 பல்.

செய்முறை:

ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

கோதுமை தோசை

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப், வெள்ளை ரவை 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை 4, கேரட் 1, சீரகம் அரை டீஸ்பூன், கெட்டி மோர் கால் டம்ளர்.

செய்முறை:

ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

மினி சாம்பார் தோசை

தேவையானவை:

(தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு 2 கப், எண்ணெய் தேவையான அளவு. (சாம்பாருக்கு) துவரம்பருப்பு கால் கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பெரிய சைஸ் தக்காளி 2, சின்ன வெங்காயம் 15, சாம்பார் பொடி 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, பொடித்த வெல்லம் 1 டீஸ்பூன், மல்லித்தழை 2 டீஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 3. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்). தாளிக்க: எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். சாம்பார் பொடி சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும். அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.
தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்), எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும். சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.

பெரு அரிசி தோசை

தேவையானவை:

புட்டரிசி அரை கப், தேங்காய் (துருவியது) கால் மூடி, வெல்லம் (பொடித்தது) கால் கப், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து விடவும். வெல்லத்தை 2 டீஸ்பூன் நீர் விட்டு சூடு செய்து இறக்கி வடிகட்டவும். மிக்ஸியில் அரிசியையும் தேங்காயையும் போட்டு நீர் தெளித்து மைய அரைக்கவும். பின்னர் அதில் வெல்லத்தை வடிகட்டி சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு, அடிப்பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு (எண்ணெய் விட வேண்டாம்) ஓரிரு நிமிடங்களில் எடுத்து விடவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல உணவாகும். சூடாகச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

மரக்கறிக்காய் தோசை

தேவையானவை:

பச்சரிசி 3 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு 1 கப், பாசிப்பருப்பு 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 8, சோம்பு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, தேங்காய் (துருவியது) கால் மூடி, சின்ன வெங்காயம் அரை கப், எண்ணெய் ஒன்றரை கப்.

செய்முறை:

மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு மூன்றையும் விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அரிசி, பருப்பு வகைகளை முதல் நாள் இரவு கழுவி ஊறவைத்து, மறுநாள் காலையில் சற்று கரகரப்பாக அரைக்கவும். அதில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், அரைத்த மிளகாய் விழுது ஆகியவற்றை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை தோசைக்கல்லில் சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, வேகும் முன் திருப்பிவிட்டு அரை வேக்காடாக எடுக்கவும். பின்னர் வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு சூடானதும், இந்த ஊத்தப்பங்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி. செட்டிநாட்டின் பிரபல மான பலகாரங்களில் இதுவும் ஒன்று.



தேங்காய் தோசை

தேவையானவை:

பச்சரிசி 1 கப், உளுத்தம்பருப்பு கால் கப்புக்கு சற்று குறைய, தேங்காய் (துருவியது) கால் மூடி, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி வைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.
இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய் 8, பூண்டு 2 பல், புளி 3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.

அழகர் கோயில் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், பச்சரிசி 1 கப், தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு 1 கப், காய்ந்த மிளகாய் 4, மிளகு 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் ஆட்டி எடுக்கவும். பச்சரிசியை கழுவி நீர் வடியவிட்டு மிக்ஸியில் திரித்து சலிக்கவும். மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்து மறுநாள் தோசைகளாக ஊற்றி எடுக்கவும். தனியாக சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது. இது அழகர் கோயிலில் கிடைக்கும் ஸ்பெஷல் தோசை. ஆனால், அங்கே மாவைக் கெட்டியாக பிசைந்து, சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள்.

வெற்றிலை தோசை

தேவையானவை:

ஆலு தோசைக்கான மாவு 1 கப், வெற்றிலை சற்று அகலமானது 4, எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

எலுமிச்சம்பழச் சாற்றை, கால் கப் நீரில் கலந்துகொள்ளவும். வெற்றிலையை எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரில் நனைத்துக் கொள்ளவும். (இது, வெற்றிலையின் நிறம் மாறாமல் இருக்க உதவும்). பின்னர் மாவில் நனைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன் நடுவில் மாவில் நனைத்த வெற்றிலையை வைத்து சுற்றிவர எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்து விடவும்.
சளி, இருமல் இருப்பவர்களுக்கு ஊற்றித் தரலாம். விருந்துகளில் பரிமாறுவதற்கும் இது வித்தியாசமான தோசை.

பாசிப்பருப்பு தோசை

தேவையானவை:

பாசிப்பருப்பு 1 கப், பச்சரிசி கால் கப், தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, சின்ன வெங்காயம் 10, பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் பெருபெருவென ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், வெங்காயம் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பிவிட்டு எடுக்கவும்.

வெஜிடபுள் தோசை



தேவையானவை:

ஆலு தோசைக்கான மாவு 2 கப், கேரட் 1, பீன்ஸ் 2, பட்டாணி (உரித்தது) 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, குடமிளகாய் 1, தக்காளி 1, எண்ணெய் தேவையான அளவு.
தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் கால் கப்.

செய்முறை:

கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் தக்காளியையும் மெல்லிய அரை வட்டங்களாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை தாளித்து சிவந்ததும், கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பின்னர் தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக), அதன் மேல் நறுக்கிய அரை வளையங்களான தக்காளி குடமிளகாயை பதித்து, மேலே மல்லித்தழை அல்லது வெங்காயத் தாள் தூவவும். சுற்றிவர எண்ணெய்விட்டு மூடி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி, வெந்ததும் எடுத்துவிடவும். பார்ப்பதற்கு இது வெஜிடபுள் பீட்ஸா போல இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெகு ஜோர்!

பீட்ரூட் ராகி தோசை

தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப், உப்பு தேவைக்கேற்ப, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு கால் கப், துருவிய பீட்ரூட் கால் கப், பச்சை மிளகாய் 3, எண்ணெய் தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை:

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சத்து மிகுந்த தோசை இது.

செட் தோசை

தேவையானவை:
பச்சரிசி 1 கப், புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு அரை கப், வடித்த பச்சரிசி சாதம் 1 கைப்பிடி, உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து (3 மணி நேரம்), சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, பொங்கிய பின் (10 மணி நேரம் கழித்து) மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதற்கு காரச் சட்னி மிகவும் சுவை கொடுக்கும். சென்னை போன்ற நகர்களில், ‘செட்தோசைவடகறி’ என்பது டிபன்களில் மிகவும் பிரபலமான ஜோடி.

முள்ளுமுருங்கை இலை தோசை

தேவையானவை:

பச்சரிசி 1 கப், முள்ளுமுருங்கை இலை 6, பச்சை மிளகாய் 2, மிளகு 10, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10.

செய்முறை:

அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும். பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும். பின் மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரி எண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

பூண்டு புதினா தோசை

தேவையானவை: ஆலு தோசை மாவு 2 கப், பூண்டு 20 பற்கள், புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும். மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும். ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம். எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.

துவரம் பருப்பு தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், துவரம்பருப்பு அரை கப், உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 2, தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, உடனே மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இதற்கு குருமா சுவை கொடுக்கும்.
குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் 6 காய்ந்த மிளகாய்களை அரைத்துப் போடலாம்.

ரவா தோசை

தேவையானவை:

பச்சரிசி ஆட்டியது 1 கப், ரவை அரை கப், மைதா மாவு அரை கப், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகு 10 உடைத்தது, சீரகம் அரை டீஸ்பூன், கறி வேப்பிலை 1 ஆர்க்கு, முந்திரிப்பருப்பு 6, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அரை கப்.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, அத்துடன் ஆட்டிய பச்சரிசி மாவு, ஊறிய ரவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து மாவில் கொட்டவும். வறுத்த முந்திரியையும், கழுவிய மல்லித்தழையையும் மாவில் கலந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலக்கி சூடான தோசைக்கல்லில், மாவைக் கரண்டியில் எடுத்து, அள்ளித் தெளித்த மாதிரி மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி வர எண்ணெய் விட்டு மூடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு மொறுமொறுவென வேக வைத்தெடுக்கவும்.
விருப்பமுள்ளவர்கள், ரவா தோசைக்கு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இதற்கு பூண்டு, மிளகாய்ச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட்!

மெதுகீரை தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், அவல் கால் கப், மோர் 2 டம்ளர், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையானது, நச்சு கெட்ட (லெச்சகெட்ட) கீரை 30 இலைகள், பச்சை மிளகாய் 2, சின்ன வெங்காயம் 15, பாசிப்பருப்பு கால் கப், உப்பு தேவைக் கேற்ப, கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன்.

செய்முறை:

புழுங்கலரிசி முதல் அவல் வரையிலான பொருள்களை 6லிருந்து 8 மணி நேரம் வரை மோரில் ஊறவைத்து ஆட்டி, உப்பு சேர்த்து சிறிது புளிக்க விடவும். கீரையின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை அரைப்பதமாக வேகவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிப்பவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து கிளறி, வெந்ததும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
தோசை மாவை வட்டமாக மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிவர எண்ணெய் விட்டு மூடவும். அடிப்புறம் வெந்ததும் மூடியைத் திறந்து அதன் மேல் கீரையை பரப்பிவிட்டு தோசைக் கரண்டியால் அழுத்தி விட்டு மறுபுறம் திருப்பாமல் எடுத்து பரிமாறவும். இந்தக் கீரை தோசை உடல்வலிக்கு நிவாரணம் தரும்.

சோயா தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், காய்ந்த சோயா 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, சின்ன வெங்காயம் 8, பச்சை மிளகாய் 2.

செய்முறை:

அரிசி, சோயா, உளுத்தம்பருப்பை கழுவி தனித்தனியாக 34 மணிநேரம் ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக ஆட்டி ஒன்று சேர்த்து உப்புக் கலக்கிவைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மாவு ஆட்டிவைத்த 10 மணி நேரம் கழித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கலந்து மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு, மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும்.

ஜவ்வரிசி தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி ஒன்றரை கப், ஜவ்வரிசி (மாவு அரிசி) 1 கப், சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 4, கடுகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை ஆட்டவும். பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் கலந்து ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும்.

கொத்தமல்லி தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு 1 கைப்பிடி, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அரை கப், மிளகு (உடைத்தது) அரை டீஸ்பூன், இஞ்சி (துருவியது) 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. தாளிக்க: சீரகம் அரை டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன்.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ஆட்டிய மாவு, உப்பு, மல்லித்தழை, தாளித்தவை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து ரவா தோசைபோல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

டிரை ஃப்ரூட் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், உளுத்தம்பருப்பு கால் கப், பெரிய கற்கண்டு (பொடித்தது) 10 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் 25, உலர் திராட்சை 25, டூட்டி ஃப்ரூட்டி 2 டேபிள்ஸ்பூன், தேன் 5 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 30, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும். ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும். மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும். பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும். அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும். அனைவரின் நாவையும் கொள்ளைகொள்ளும் இந்த தோசை, பள்ளிக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்.

This page is powered by Blogger. Isn't yours?