<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

பால் ஆப்பம் / வடைகறி 

தேவையானவை:

பச்சரிசி 2 கப், தேங்காய் துருவல் amp; 2 டேபிள்ஸ்பூன், சற்றுப் பழையதான (அதாவது, 2, 3 நாட்கள் புளிக்கவைத்த) தேங்காய் தண்ணீர் 2 கப், புழுங்கலரிசி சாதம் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்ப சோடா கால் டீஸ்பூன்.

செய்முறை:

இந்த ஆப்பத்துக்காக, தேங்காய் தண்ணீரை 2, 3 நாட்கள் முன்னரே எடுத்து வைக்கவேண்டும். 2 கப் தண்ணீர் என்றால், 2 டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து புளிக்கவைக்க வேண்டும். ஆப்பம் செய்யப்போகும் நாளில், அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், தேங்காய் தண்ணீர், சாதம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள். நன்கு நைஸாக அரைபட்டதும், உப்பு, ஆப்ப சோடா சேர்த்துக் கரைத்து வையுங்கள். பிறகு, வழக்கம் போல, குழிவான வாணலியிலோ, ஆப்பச்சட்டியிலோ ஆப்பங்களாக ஊற்றி எடுங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள, கடலைக் குழம்பு அல்லது உருளைக்கிழங்கு கறி போன்றவை மிக சுவையாக இருக்கும்.

‘வடகறி’ செய்வது எப்படி?

‘‘நாங்கள் சென்னைக்கு புதுசு. இங்கே வந்த பிறகு, கல்லூரியில் படிக்கும் என் மகன் ஹோட்டலில், நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட ‘வடகறி’ என்ற அயிட்டத்தை வீட்டில் செய்யச் சொல்லிக் கேட்கிறான். வடகறி செய்வது எப்படி எனக் கூறுவீர்களா?’’

‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்டிஷ்களில் ஒன்று. அதை செய்யத்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, தேங்காய்ப்பால் ஒரு கப், புதினா, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா ஒன்று, பச்சை மிளகாய் 3.

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்த மசாலா விழுதில் இருந்து சிறிதளவு எடுத்து, கடலைப் பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய்தூள், மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு பாதி அளவு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பக்கோடாக்களை உடைத்துப் போடுங்கள். இது 5 நிமிடம் கொதித்ததும் மீதியுள்ள பாலை சேர்த்து கிளறி இறக்குங்கள். (தளதளவென இல்லாவிட்டால், சிறிது கொதிக்கும் நீரை சேர்க்கலாம்). இதுதான் ‘வடகறி’. இட்லி, இடியாப்பம், ஆப்பம், பொங்கல் போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மசால்வடை மீந்துவிட்டால் கூட இதுபோல் செய்யலாம்’’.

முகலாய் நெல்லியவல் 

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப், நெல்லிக்காய் amp; 8, கடலைப்பருப்பு அரை கப், தேங்காய் துருவல் 1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு தலா 10, ஏலக்காய் தூள் சிறிதளவு, நெய் கால் கப், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது) ஒரு கப்.

செய்முறை:

மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்புதேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும். -நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது

வெஜிடபிள் முகலாய்

தேவையானவை:

கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை 2 கப், பச்சை மிளகாய் 4, தயிர், தேங்காய் துருவல் தலா 1 கப், சீரகம், கசகசா தலா 2 டீஸ்பூன், பட்டை 1 , இலை சிறிது, இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பாதாம்பருப்பு 5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய் தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும். பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி. பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

அவல் லெமன் கிச்சடி

தேவையானவை:

அவல் ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள் 2 டீஸ்பூன், தனியாதூள் 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) முக்கால் கப், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி 5, நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும். தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும். ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.

சேமியா பால் போளி ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி 

தேவையானவை:

சேமியா ஒரு கப், மைதா amp; ஒரு கப், பால் 4 கப், எண்ணெய் ஒன்றரை கப், சர்க்கரைத் தூள் 2 கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.

செய்முறை:

சேமியாவை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது பால் விட்டு அரைக்கவும். பின் மைதா, நெய்யையும் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிபோல் இட்டுப் பொரிக்கவும். பொரித்த பூரிகளை தாம்பாளத்தில் அடுக்கவும். பாலைக் காய்ச்சி, ஏலப்பொடி, கேசரி பவுடர் போட்டு, சுடச் சுட பூரிமேல் விடவும். நன்றாக ஊறிய பிறகு, தனித்தனி தாம்பாளத்தில் போட்டு அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரைப் பொடியை தூவி, ஸ்பூன் போட்டு பரிமாறவும். மிக மிக சுவையான இந்த பால் போளி, வீட்டு விருந்துகளுக்கு செய்வதற்கேற்ற புதுமையான ஸ்வீட். காய்ச்சிய பாலில், சிறிது மில்க்மெயிட் சேர்த்து கரைத்து, பூரி மேல் ஊற்றிக் கொடுத்தால், சர்க்கரை தூளின் அளவைக் குறைத்துக் கொள்ள லாம்.

ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி

தேவையானவை:

உடைத்த சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு _ கால் கிலோ, சோயா உருண்டை துருவல் _ கால் கப், சோம்பு _ அரை டீஸ்பூன், இஞ்சி _ சிறு துண்டு, பச்சை மிளகாய் _ 3, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) _ அரை கப், மிளகுதூள் _ முக்கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் _ அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் _ அரை டீஸ்பூன், உப்பு _ ருசிக்கேற்ப, வெள்ளை அவல் (வறுத்து பொடித்தது) _ அரை கப், கார்ன்ஃப்ளார் _ கால் கப், எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோயா உருண்டை துருவலை ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு, ஊற வைத்து, வடிகட்டி, 23 முறை அதில் குளிர்ந்த நீரை விட்டு, வாடை போக நன்கு அலசி, பிழிந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். சேமியாவையும் வேகவிட்டு, உதிர் உதிராக, வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சோம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிழிந்து வைத்த சோயா துருவல் போட்டு, ஒன்றிரண்டு நிமிடம் கிளறவும். அத்துடன் கரம்மசாலா தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். இத்துடன் வெந்த சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை நன்கு ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் போதுமான நீர் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, அவல் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ§டன் பரிமாற, சுவையோ சுவை!
கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது கடலைமாவையும் சேர்த்துக் கரைத்தால், கூடுதல் ருசி கிடைக் கும்.

எரிசேரி/ கப்பக் கஞ்சி / சக்கப் பிரதமன் 

எரிசேரி

தேவையானவை:

முழு பாசிப்பயறு (அல்லது) காராமணி அரை கப், பூசணிக்காய் amp; ஒரு கீற்று, வாழைக்காய் 1 (அல்லது) சேனைக்கிழங்கு ஒரு துண்டு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு. அரைக்க: தேங்காய் ஒரு மூடி, சீரகம் ஒரு டீஸ்பூன், பூண்டு (விருப்பப்பட்டால்) 2 பல், காய்ந்த மிளகாய் 6லிருந்து 8. தாளிக்க: தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பூசணிக்காய், வாழைக்காய் இரண்டையும் தோல் சீவி, சிறு துண்டுகளாக்குங்கள். பாசிப்பயறை வேகவிடுங்கள். பாதியளவு வேகும்போது, நறுக்கிய காய்களை அதனுடன் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவிடுங்கள். காய்கறிகள் வெந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துச் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதிக்கும் எரிசேரி. இப்போது, தேங்காய் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய் துருவலை போட்டு, அது பொன்னிறமாகச் சிவந்ததும் கொதிக்கும் எரிசேரியில் கொட்டுங்கள். கேரளத்தின் பாரம்பரியக் கூட்டு வகை இது. குறிப்பு: காராமணி சேர்ப்பதானால், வறுத்து, வேகவைத்து, பிறகு காய்களை சேருங்கள்.

சக்கப் பிரதமன்

தேவையானவை:

பலாச்சுளைகள் 10, வெல்லம் (பொடித்தது) ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால் ஒரு கப், ஏலக்காய் தூள் சிட்டிகை, நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பலாச்சுளைகளை விதை நீக்கிப் பொடியாக நறுக்குங்கள். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து, நறுக்கிய பலாச்சுளைகளை வதக்குங்கள். பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். அரைத்த பலாச்சுளை விழுதுடன், வெல்லப்பாகை சேர்த்து, குறைந்த தீயில், விடாமல் கிளறுங்கள். கடைசியில் தேங்காய்ப்பாலை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். மீதியிருக்கும் நெய்யையும் சேருங்கள். பலாச்சுளை மணமும் தேங்காய்ப்பால் சேர்ந்த சுவையும் உங்கள் மனசையும் நாவையும் கட்டிப் போடும். கேரளத்தின் தலையாய இனிப்பு இது.

கப்பக் கஞ்சி

தேவையானவை:

சிகப்பரிசி (புட்டரிசி) அரை கப், பரங்கிக்காய் சிறு துண்டு, வாழைக்காய் பாதி, தேங்காய்ப்பால் ஒரு கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

காய்களை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரிசியை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெந்த பிறகு, கரண்டியால் மசித்து விடுங்கள். அதனுடன், கொதிக்கும் நீர் 3 கப் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும் சேருங்கள். காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேங்காய்ப் பாலையும் ஊற்றுங்கள். கொதித்ததும் இறக்குங்கள். மணக்கும் கஞ்சி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள, மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து விரல்நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். அல்லது, காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தும் தொட்டுக் கொள்ளலாம்.

ஜாதி நாரத்தங்காய் சாதம் இன்ன பிற .... 

ஜாதி நாரத்தங்காய் சாதம்

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப், நாரத்தங்காய் amp; 1, தேங்காய்துருவல் 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 2, உப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் சிறிது.

செய்முறை:

நாரத்தங்காயைப் பிழிந்து சாறெடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து அந்த விழுதை சாதத்துடன் சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை தாளித்து சாதத்தில் கொட்டி, கடைசியாக நாரத்தங்காய் சாறையும் விட்டு எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி இறக்கவும். பித்தத்துக்கு மிகவும் நல்லது. இதே போன்று கிடாரங் காய் சாறு விட்டும் செய்யலாம்.

கடுகோரை

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப். அரைக்கவேண்டியவை: தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, புளி கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம் ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் சிறிது, கறிவேப்பிலை சிறிது. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு அரை டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் கால் கப்.

செய்முறை:

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, பின் அரைத்த விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் வடித்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கவும். ஆடி 18க்கு செய்ய அருமையான சித்ரான்னம், கர்நாடகா ஸ்பெஷலான இந்த கடுகோரை!
அரைக்கும் சாமான்களில் கடுகுக்கு பதில் எள் சேர்த்து இதே போன்றே செய்யலாம்.

மல்டி புரோட்டீன் ரைஸ்

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப், வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 5, பாதாம்பருப்பு 5, காய்ந்த மிளகாய் 4, பெருங் காயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன்.

செய்முறை:

வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவை களை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை இவைகளை ஒன்றாக வறுத்துக் கொள்ளவும். மிளகாயை ஒரு துளி எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு, பெருங்காயப் பொடி இவைகளை பொடி செய்து பின்னர் அவற்றுடன் வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை போட்டு பொடி செய்யவும். பின்னர் இந்த பொடியை சாதத்தில் போட்டு கலந்து பரிமாறவும். சுவையான புரோட்டீன் ரைஸ் தயார்.வேர்க்கடலை, பாதாம், முந்திரி இவைகளை கடைசியில் தான் போட்டு பொடி செய்ய வேண்டும். முதலிலேயே போட்டால் மற்ற பருப்புகள் பொடியாகாது.

பாகற்காய் பிரியாணி/ ஆனியன் பிரியாணி / நொய் பாயசம் 

பாகற்காய் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி ஒரு கப், பாகற்காய் (நடுத்தர சைஸ்) amp; 1, பெரிய வெங்காயம் 2, பால் ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது 2 டீஸ்பூன், உப்பு தேவையானது, புதினா, மல்லித்தழை தலா சிறிதளவு, வினிகர் 2 டீஸ்பூன். தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊற வையுங்கள். பாகற்காயை வில்லைகளாகவும் வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். பாகற்காயில் வினிகரையும் ஒரு சிட்டிகை உப்பையும் கலந்து பிசறி வையுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை பொரிந்ததும் பாகற்காயைப் பிழிந்து போட்டு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, உப்பு, பால், பாசுமதி அரிசி (தண்ணீருடன்), எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாகப் பரிமாறுங்கள். பாகற்காய்க்கே உரிய கசப்பு லேசாக இருந்தாலும், ‘இது வரை இப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டதே இல்லை’ என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள் சாப்பிட்டவர்கள்.

ஆனியன் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், சின்ன வெங்காயம் 15, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, பால் ஒரு கப், உப்பு தேவையான அளவு. தாளிக்க: பட்டை ஒரு துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீர், பால் சேர்த்து ஊற வையுங்கள். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து இரண்டு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்குங்கள். இவை வதங்கியதும் அரிசியை, ஊற வைத்த பால் + தண்ணீருடன் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு ஒரு விசில் வந்ததும், தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறுங்கள்.

நொய் பாயசம்

தேவையானவை: பச்சரிசி நொய் அரை கப், கெட்டியான தேங்காய்ப்பால் ஒரு கப், வெல்லம் (பொடித்தது) ஒன்றரை கப் (பாகு வெல்லமாக இருந்தால், ஒன்றேகால் கப்), நெய் கால் கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்.

செய்முறை:

மூன்று கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரிசி நொய்யை சேருங்கள். சிறுதீயில், நன்கு குழைய வேகவிடுங்கள். இன்னொரு அடுப்பில், வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, வெந்து கொண்டிருக்கும் நொய்யுடன் சேருங்கள். விடாமல் கிளறி, அவ்வப்போது சிறிது நெய்யும் சேருங்கள். நன்கு வெந்து, பாகு வாசனை வரும்போது கீழே இறக்கி, மீதமுள்ள நெய், தேங்காய்ப்பால், ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறுங்கள். குறிப்பு: நொய் வேகும்வரை விடாமல் கிளறவேண்டும். இல்லையெனில் கட்டிபடும். இறக்கும்போது கெட்டியாக இருந்தால், தேவையான அளவு கொதிக்கும் நீரை சேர்த்துக்கொள்ளலாம்.

அசைவம் - ஈரல் பிரியாணி 

ஈரல் பிரியாணி

தேவையானவை:

ஈரல் 200 கிராம், பிரியாணி அரிசி amp; ஒரு கப், தக்காளி 3, பெரிய வெங்காயம் 2, மிளகு ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 7 பல், பட்டை 1, ஏலக்காய் 3, லவங்கம் 1, மிளகாய்தூள் கால் டீஸ்பூன், தனியாதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு அரை டீஸ்பூன், மல்லித்தழை ஒரு கைப்பிடி, புதினா 10 இலை, கறிவேப்பிலை 5 இலை, எண்ணெய் கால் கப், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஈரலை நன்கு கழுவி, பொடியாக நறுக்குங்கள். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மிளகு முதல் உப்பு வரை சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த மசாலாவைப் போட்டு, ஈரலையும் சேர்த்து, சுருளச் சுருள வதக்குங்கள். (கவனிக்கவும்: தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). வதங்கும்போதே புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் கக்கும் வரை வதக்குங்கள். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்துவிடுங்கள். இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, உப்புப் போட்டு, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து அரைவேக்காடாக வடித்துக்கொள்ளுங்கள். வடித்த சாதத்தை, வதங்கிக்கொண்டிருக்கும் ஈரல் தொக்கில் சேர்த்துக் கிளறி, ‘தம்’ போடுங்கள். 5 நிமிடம் கழித்து, இறக்கி சுடச்சுடப் பரிமாறுங்கள். காரசாரமான பிரியாணி இது.

முந்திரிப்பால் கைமா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், மட்டன் கைமா (கொத்துக்கறி) 150 கிராம், முந்திரி 50 கிராம், திராட்சை 10, நெய் கால் கப், எண்ணெய் 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம் தலா 1, ஏலக்காய் 3, பெரிய வெங்காயம் 1, தயிர் கால் கப், பச்சை மிளகாய் 5, புதினா ஒரு கைப்பிடி, உப்பு அரை டீஸ்பூன்.

செய்முறை:

பிரியாணி அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். கைமாவைக் கழுவி எடுத்துவையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்குங்கள். முந்திரியை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, ஊறியதும், மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரையுங்கள். அரைத்ததை தேங்காய்ப்பால் போல கெட்டியாக வடிகட்டி, திப்பி இல்லாமல் ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் நைஸாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு, பொன் வறுவலாக வதக்குங்கள். நன்கு வதங்கியதும், பட்டை, லவங்கத் தூள் போட்டுப் பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், தயிர், உப்பு சேர்த்து, அத்துடன் கைமாவையும் போட்டு வதக்குங்கள். வெந்தபிறகு, வடிகட்டி வைத்திருக்கும் முந்திரிப்பாலைத் தூக்கி ஊற்றி, அது கொதிக்கும்போது அரிசியைப் போட்டு, அது வெந்து, தண்ணீர் வற்றி ‘தளதள’வென வரும்போது தீயைக் குறைத்து, நெய்யில் வறுத்த திராட்சையைச் சேர்த்து 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். ‘பொலபொல’வென வந்ததும் இறக்குங்கள். இந்த பிரியாணி, முந்திரியின் சுவையும் மணமும் சேர்ந்து, படு ‘ரிச்’சாக இருக்கும். குறிப்பு: முந்திரிப்பால் அடிப்பிடிக்கும் என்பதால் குக்கரில் இந்த பிரியாணியை செய்யமுடியாது. பாத்திரத்தில் செய்யும்போது கூட, நன்கு கிளறிவிட வேண்டும். இல்லையெனில் அடிப்பிடித்து விடும்.

This page is powered by Blogger. Isn't yours?